3326. மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே
கரையாக் கல்என்று
பொருணா டியநின் திருவாக்கே புகல
அறிந்தேன் என்னளவில்
கருணா நிதிநின் திருவுளமுன் கல்என்
றுரைக்க அறிந்திலனே
இருணா டியஇச் சிறியேனுக் கின்னும்
இரங்கா திருந்தாயே.
உரை: மருட்சி கொண்ட மண்ணுலகில் உயிர்க் கொலை செய்பவர் மனம் தான் கரையாத கல்லாகு மென உறுதிப் பொருள்களை யாய்ந்துரைக்கும் நின் திருமொழியாகிய வேதம் உரைப்பது கண்டுளேன்; கருணைப் பெருஞ் செல்வனாகிய நினது திருவுள்ளம் என்னைப் பொறுத்த அளவிற்கல்லா மென்று சொல்லுவதாக யான் கேட்டதில்லை; இருள் படிந்து சிறியனாகிய எனக்கு இரக்கமின்றியிருக்கின்றாய்; இஃது என்னே. எ.று.
மெய் பொய்களையும் நன்று தீதுகளையும் பிறழக் காணும் உலகம் “மருள் நாடுலகு” எனப்படுகிறது. இவ்வுலகவர்க்குத் தெளிவு உண்டாகும் பொருட்டு இறைவன் பண்டேயுரைத்த அறிவுரைகள் வேதவாக்கு என்று பெரியோரால் குறிக்கப்படுகின்றன; அவற்றுள் உயிர்களைக் கொன்று திரியும் கொடுமையாளர் மனம் அன்பாற் குழைந்து உருகாத கல்லொத்த மனம் என்பது ஒன்று என்று அறிந்துள்ளேன் என்பாராய், “கொலை புரிவார் மனமே கரையாக் கல்லென்று நின் திருவாக்கே புகல அறிந்தேன்” என வுரைக்கின்றார். அனாதி மலப்பிணிப்பால் ஐயமும் திரிபும் நிறையக் கொண்ட மக்களுயிர்க்கு உறுதியாவன என ஆராய்ந்து எடுத்துரைக்கப்படும் அறிவுரைகளை வேதம் என்றும், வேதவாக்கு என்றும் ஓதுவது பற்றி, “பொருள் நாடிய நின் திருவாக்கே புகல” என்றும், பிறர் சொல்லக் கேட்டதுடன் யானே கற்றறிந்துளேன் என்பார், “அறிந்தேன்” என்றும் இயம்புகின்றார். பிறவுயிர்களும் உலகிற் பிறந்து வாழ்ந்து உய்தி யடைதற் குரியன என எண்ணி இரக்கம் கொள்ளாமை கண்டு, “கொலை புரிவார் மனமே கரையாக்கல்” என வேதம் கூறுகிறது என்பது கருத்து. உருகாத் தன்மையுடைய கல் - உருகாக் கல். இவ்வாறு பொருளுரை புகன்ற அருளாளனாகிய நினது திருமனம், என்னைக் கண்டு இரக்கம் கொண்டு அருள் செய்யாமையால் “என்னளவில் கருணாநிதி நின் திருவுளமும் கல்லென்றுரைக்க அறிந்திலன்” என்று உரைக்கின்றார். தெளிவும் ஒளியுமின்றி அறியாமை இருள் படிந்து நினைவு சொற் செயல்களிற் குற்றமுற்றுச் சிறுமையெய்தியுள்ளமை யுணர்த்தற்கு “இருள் நாடிய இச்சிறியேன்” எனத் தம்மைக் குறித்து மொழிகின்றார்.
இதனால் இறைவன் தன்பால் இரக்கம் கொண்டிலன் என முறை யிட்டவாறாம். (4)
|