3327.

     முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப்
          பின்னுங் கொடுமைசெய
     உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங்
          கருணை உடையானே
     மன்னும் பதமே துணைஎன்று மதித்து
          வருந்தும் சிறியேனுக்
     கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன
          கொடுமை செய்தேனோ.

உரை:

     முன்பு பல தீமைகளைச் செய்து செய்வாரையும் ஊக்கிப் பின்பும் அவற்றையே நினைந்து செய்யும் கொடுமையாளர்க்கு அருட்டுணை புரியும் கருணைக் கடவுளே, அறவோர் திருவுள்ளத்தில் நிலைபெறும் திருவடியே துணை என்று எண்ணி வருத்தமுற்றுச் சிறியனாகிய எனக்கு இப்பொழுதும் அருள் செய்யாதிருக்கின்றாய்; இதற்குக் காரணமாக யான் யாது கொடுமை செய்தேனோ, அறியேன். எ.று.

     முன்பு பல கொடுமை செய்துள்ளோமே, அவை யமையும் என நினையாமல் பிறர்க்குத் தீமை செய்பவரையும் மேன்மேலும் செய்தும் செய்வித்தும் ஒழுகும் கொடியவர்களை, “முன்னும் கொடுமை பல புரிந்து முடிகிப் பின்னும் கொடுமை செய வுன்னும் கொடியர்” என வுரைக்கின்றார். முடுகுதல் - ஊக்குதல். உன்னுதல் - எண்ணுதல். நல்லன செய்யும் நல்லோர்க்கே யன்றித் தீமையே செய்யும் தீயவர்க்கும் ஒப்ப அருள் புரிவது விளங்க, “கொடியர் தமக்கும் அருள் உதவும் கருணையுடையானே” என மொழிகின்றார். இஃது இறைவனது கொடைமடம் கூறியது. மன்னுதல் - நிலைபெறுதல். அறமே நினைந்து செய்தொழுகும் தூயவருள்ளத்தில் என்றும் நின்று திகழ்வதுபற்றி, இறைவன் திருவடியை “மன்னும் பதம்” எனச் சிறப்பிக்கின்றார். மதித்தல் - எண்ணுதல். துன்பத்தால் வருந்துவோர் அறிவாற்றல் சுருங்கிச் சிறுமை யுறுவது தோன்ற, “வருந்தும் சிறியேன்” என்றும், துன்பம் தொடர்ந்து வருத்துவதால், “சிறியேனுக் கின்னும் கருணை புரிந்திலை” என்றும், அருள் எய்தாமைக்குத் தடையாவது தான் செய்துள்ள கொடுமை யென எண்ணுதல் விளங்க, “என்ன கொடுமை செய்தேனோ” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், துன்பம் நீங்காமைக் கேது தாம் செய்த கொடுமையென நினைந்து முறையிட்டவாறாம்.

     (5)