3328. அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார்
அமுதம் அளித்தையோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான்
அளிக்க இசைந்தாயேல்
செங்கேழ் இதழிச் சடைக்கனியே சிவமே
அடிமைச் சிறுநாயேன்
எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என்
முகம்பார்த் திடுவாரே.
உரை: செவ்விய பொன்னிறம் கொண்ட கொன்றை மலரை யணிந்த சடையையுடைய கனி போன்ற சிவபெருமானே, ஆங்காங்குள்ள அடியார்களெல்லார்க்கும் நின் திருவருளாகிய அமுதத்தை யுதவி, இவ்விடத்தே இருந்து வேண்டும் சிறியவனாகிய என்னொருவனுக்கு இடரே செய்தற்கு உடன்படுவாயாயின், அடிமையாய்ச் சிறுநாய் போன்ற யான் எவ்விடம் செல்வேன்; யாது செய்வேன்; என் முகத்தைப் பார்த்து அருள் செய்பவர் யாவர்? எ.று.
செம்பொன்னின் நிறமுடையதாகலின் கொன்றை மலரை, “சேங்கேழ் இதழி” எனச் சிறப்பிக்கின்றார். “பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந் தண்மார்பர்” (ஏகம்) என நாவரசர் நவில்வது காண்க. கனிபோல்வது பற்றிக் கனியே என்கின்றார். ஆங்காங்குச் சிவநேயமும் சிவத்தொண்டும் புரிந்தொழுகும் சிவனடியார்களை “அங்கே யடியர் தமக்கெல்லாம்” எனக் கூறுகின்றார். திருவருள் ஞான வின்பம் தருவதாகலின், அதனைச் சான்றோர் அமுதம் என்று புகழ்வது மரபு. “உன் அருளாரமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன்” (அடைக்) என்பது திருவாசகம். துன்பத்தாற் சுருங்கிய கண்கொண்டு நோக்கலின், “இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல்” என இசைக்கின்றார். பலர் இன்பமுற ஒருவர் துயருறச் சான்றோர் பொறார் என்பது பற்றி, “இடர்தான் அளிக்க இசைந்தாயேல்” என்கின்றார். இடருற்று வருந்துகின்றமை தோன்ற “இசைந்தாய்” என வுரைக்கின்றார். கேழ் - நிறப்பொருட்டு. அடிமைச் சிறியேன், அடிமைப் பணியும் துன்பத்தால் எய்திய சிறுமையும் உடைமை விளங்க, “அடிமைச் சிறு நாயேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். சிவமல்லாற் புகலிடம் வேறின்மையால் “எங்கே புகுவேன்” எனவும், ஒன்று செய்து பெறற்பாலதன்மையின், “என் செய்வேன்” எனவும் இயம்புகின்றார். கண்ணோட்ட முடையார் பால் முகம் பார்த்து நிற்றலே யமையுமாகலின், “எவர் என் முகம் பார்த்து இடுவார்” என வருந்துகின்றார். துன்பத்தால் ஒளி யிழந்த முகத்தை அருளாளரல்லது பிறர் யாரும் காணவிழையார் என்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார் என்றுமாம்.
இதனால், நீ கண்டருளாயாயின் என் முகம் பார்த்து அருள் செய்வார் பிறர் இல்லையென முறையிட்டவாறாம். (6)
|