3329. அளியே அன்பர் அன்பேநல் அமுதே
சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்பநடம் புரியும்
அரசே விதிஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு
நினையாத் திருஉளந்தான்
எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ
கருணை எந்தாயே.
உரை: ஆதரவானவனே, மெய்யன்பர் மனத்தின்கண் அன்புருவானவனே, அமுதம் ஒப்பவனே, தூய அறிவெனப்படும் ஆகாசமே, அந்த ஆகாசத்தில் திருக்கூத்தாடும் அருளரசே, எந்தையே, விதி முறையொன்றும் தெரியாதவனாதலால் எனக்குத் தீங்கு செய்தாலும் பிறர்க்குத் தீது நினைக்காத திருவுள்ளம் எளியவனாகிய யான் நினைந்தொழுக நினது திருவருள் எனக்கு இசைந்தருளுமோ. எ.று.
அளித்தல் - ஆதரவு செய்தல். ஆதரிக்கும் பண்பும் செயலும் உடைமை பற்றி, இறைவனை, “அளியே” எனக் கூறுகின்றார். மெய்யன்பர் மனக் கோயிற் கண் அன்புருவாய் எழுந்தருளுதலால் “அன்பர் அன்பே” என வுரைக்கின்றார். மெய்யன்பில் விளையும் இன்பமும் அப்பெருமான் அருளாதல் பற்றிச் சிவனை “அமுதே” என்கின்றார். இன்ப அனுபவத்தையுணரும் அறிவின்கண் தோன்றும் ஞான நிலையை, “சுத்த அறிவான் வெளியே” என்று இயம்புகின்றார். இதனை ஞானிகள் சிதாகாசம் என்பர்; இது சிதம்பரம் எனவும் வழங்கும். இச் சிதாகாசச் சிதம்பரத்தில் திருக்கூத்து இயற்றுதலால், “வெளியில் இன்ப நடம் புரியும் அரசே” என்று விளம்புகின்றார். நல்வாழ்வுக் கமைந்த விதி விலக்குகளைத் தாம் அறியாமையைக் கூறுவார், “விதி யொன்றும் தெளியேன்” எனத் தெரிவிக்கின்றார். விதித்தன செய்தலும் விலக்கியன தவிர்தலும் வாழ்க்கை யறமாகும்; தீங்கு செய்தார்க்கும் நீ யாதும் தீங்கு நினையாதே என்பது விதி. அதனை நினைவிற் கொண்டொழுகும் உள்ளத்தின் உயர்வு விளங்கத் “திருவுளம்” எனச் சிறப்பிக்கின்றார். இத் திருவுள்ளம் தமக்கு அமைதல் வேண்டி இறைவன் திருவருளை இறைஞ்சுகின்றாராகலின், “திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை” என முறையிடுகின்றார். நினைத்தற்கு இசைந்து துணை புரிதல் வேண்டும் என்பார், “நினைக்க ஒருப்படுமோ கருணை” என வுரைக்கின்றார். ஒருப்படுதல் - இசைதல். “விளம்புமா விளம்பே”, “நினையுமா நினையே” எனப் பிறரும் திருவருளை ஒருப்பட வேண்டுதல் காண்க.
இதனால், விதி வழி யொழுகத் திருவருள் இசைக என முறையிட்டவாறாம். (7)
|