3330.

     தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய்
          கருணை எனத்தெளிந்து
     வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற்
          றிருந்தேன் என்னளவில்
     சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன்
          யாரைத் துணைகொள்வேன்
     ஏது நினைப்பேன் ஐயாநான் பாவி
          உடம்பேன் எடுத்தேனே.

உரை:

     தீங்கு நினைத்த பாதக வேதியன் போன்ற தீவினையாளர்க்கும அருள் செய்தவன் நீ என்று அறிவால் தெளிய வுணர்ந்து வாது செய்யும் நினைவுகைளைக் கொண்டு கீழ்மை யுற்றவனாகிய யான் மகிழ்ந்திருந்தேன்; இனி என் மகிழ்ச்சிக்கு மாறாக எனக்கு அருளாயாயின் என் குறையை யாரிடம் சொல்வேன்; யாவரைத் துணையாகக் கொள்வேன்; எதனை நினைப்பேன்; ஐயோ, பாவியாகிய நான் ஏன்தான் பிறந்தேனோ. எ.று.

     தீது நினைக்கும் பாவிகள், அவந்தி வேதியன் மகனாய்த் தாயைக் கற்பழித் தொழுகிய மாபாதகன் போன்றவர். “அன்னையைப் புணர்ந்து தாதை குரவனா மந்தணாளன், தன்னையும் கொன்ற பாவம் தனித்து வீடளித்தது” (மாபாதகம் தீர்த்தது) எனத் திருவிளையாடற் புராணம் கூறுவது காண்க. தீய பாவிகட் கெல்லாம் திருவருள் புரிந்த பேரருளாளனாதலால், மாறுபட நினைத்துக் கீழ்மையுறும் தனக்கும் அருள் செய்வான் என்ற எண்ணத்தால் மைந்து மலிந்திருந்தமை புலப்படுத்தற்கு “வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற்றிருந்தேன்” என்று இயம்புகின்றார். வாது - மாறுபட்டுரைத்தலும் செய்தலுமாம்; வாது புரிபவனைப் பிணங்குவோன் என்றலு முண்டு. மனக் கடையேன் - மனமுடைமையாற் கடைப்பட்டவன். துணையாகாது மாறு செய்தல் சூது செய்தல் எனப்படும். சிவனை யல்லது துணையாவார் வேறு எவரும் இல்லாமையால், “யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைக் கொள்வேன்” என்றும், துணையாகும் பொருள் யாதும் இல்லையென்றற்கு, “ஏது நினைப்பேன்” என்றும், ஒரு பற்றுக்கோடு மில்லாத பிறப்புப் பாழாதலால், “ஐயோ நான் பாவி உடம்பேனெடுத்தேன்” என்றும் சொல்லி வருந்துகின்றார். பிறந்தேன் எனற்பாலது “உடம் பெடுத்தேன்” என வந்தது.

     இதனால், அரிய மக்களுடம்பெடுத்துப் பயன் பெறாது கழிவது நினைந்து வருந்தியவாறாம்.

     (8)