3331. பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும்
கருணை புரிவதன்றிக்
கதுவென் றழுங்க நினையாநின் கருணை
உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த
வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ
புழுவில் இழிந்தேனே.
உரை: தில்லையம்பலம் யாவர்க்கும் பொது வென்றறிந்தும் நாளைப் போவார்க்கு இரக்கம் கொள்ளாத அந்தணர்க்கும் திருவருள் புரிந்ததோடு மனம் அஞ்சி வருந்த நினையாத நின் திருவுள்ளம், அறியத் தக்கது இதுவென்று அறியாத என்னை வருத்துவதற்கு எவ்வாறு துணிந்ததோ? காரணம் இன்னதென அறிய மாட்டாத புழுவினும் இழிந்த யான் யாது செய்வேன். எ.று.
தில்லையம்பலத்துக்குரிய பெயர்களில் பொது என்பது யாவரும் புகுந்துபோந்து திருக்கூத்துக் காண அமைந்தது என்ற கருத்துடையதாகவும் நாளைப் போவாரது குலம் நினைந்து மறுத்தவர்களை “இரங்காத சில” ரென்றும், அவர்கட்கும் அருள் செய்து நாளைப் போவாரைத் தீக்குளித்து முனிவராய் வரச் செய்தருளிய நலத்தை, “கருணை புரிவதன்றிக் கதுவென்றழுங்க நினையா நின் கருணையுளம்” என்றும் ஓதுகின்றார். மறுத்த சிலர் கதுமென அஞ்சி என்ன காரியம் செய்தோம் என வருந்தாவண்ணம் அருளியதை, “கதுவென் றழுங்க நினையா” என்று இயம்புகின்றார். பெறப்படும் அறிவு வகை பலவற்றுள் பரம்பொருளின் மெய்ம்மையறியும் அறிவே அறிவாம் என்பதறியாதவன் எனத் தம்மைக் குறிக்கும் வடலூர் வள்ளல், “அறிவென்பது இதுவென் றறியா எனை” என்று கூறுகின்றார். இரக்கமிலார்க் கருளிய பெருமானாகிய நீ அறிவறியாத என்னைத் துன்பமுறுவிக்க மனம் கொண்டாய் என இறைஞ்சுவாராய், “நின் கருணையுளந்தான் எந்த வகையால் துணிந்தது” என வேண்டுகின்றார். காரணம் நினைந்து காண மாட்டாமையால் “எதுவென்றறிவேன்” எனவும், “என்புரிவேன்” எனவும், தமது புன்மைகாட்டற்குப் “புழுவில் இழிந்தேன்” எனவும் புகல்கின்றார்.
இதனால் அறிவறியும் திறமில்லாத என்னை வருத்துதல் கூடாதென முறையிட்டவாறாம். (9)
|