3332. வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர்
தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான்
நினது திருஉளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன்
மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ
இதற்குந் துணிந்ததுவோ.
உரை: சிதறுண்டு வருந்துகின்றவர்களைக் கண்ணறக் கண்டிருக்கும் கொடியவரையும் வினைத் துன்பம் பற்றி வருத்துவதைப் பார்க்க விரும்பாத பெருமானாகிய நினது திருவுள்ளம் நடிப்பவர் நடிப்பைப் பார்த்து மகிழும் இவ்வுலகின்கண் சிறுமை யுடையவனாகிய என்னுடைய மனம் குற்றங்களால் துயர் பொறாமல் துடிப்பதைப் பார்த்து வாளா இருக்கின்றது; ஐயோ, இச் செயற்கு எப்படித்தான் துணிவு கொண்டதோ, எனக்கு வியப்பாகவுள்ளது. எ.று.
வெடித்தல் - சிதறுண்டல். “கடிகாவில் காற்றுற் றெறிய வெடிபட்டு வீற்று வீற்றோடும் இமையில் போல்” (களவழி) என்று பொய்கையார் உரைப்பது காண்க. கண்ணெதிரே உடைமையும் உடம்பும் வெடித்துச் சிதறுண்டு வருந்துவோரைக் கண்டு இரக்கமின்றி யாரும் இரார்; இருப்பாரினும் கொடியவர் வேறில்லை என்றற்கு “வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர்” என விளம்புகின்றார். செய்தார் செய்த செய் வினைப்பயனாக வரும் துன்பங்கள் அவர்களைப் பற்றி வருத்துவதைக் காண வல்லானல்லனாகலின், அருளுருவாகிய இறைவன் அத்துன்பங்களால் வருந்துவோர் பெரிய கொடியவராயினும்காணத் தரியாதவன் என்பார், “வெய்யர் தமையும் வினைத் துன்பம் பிடிக்க பார்க்கத் துணியாத பெருமான்” எனப் புகழ்கின்றார். தாம் செய்யும் குற்றங்களைப் பொய்யால் மறைத்து மெய்யர் போல் நடிப்பவர் பலரை யுடையது உலகமாதல் விளங்க, “நடிக்கப் பார்க்கும் உலகத்தே” என வுரைக்கின்றார். தமது அறிவாற்றலின் சிறுமை யுரைத்தற்குச் “சிறியன்” என்றும், செய்த குற்றங்கள் காரணமாகத் துன்பம் போந்து தாக்கி வருத்துதலால், “நினது திருவுளம் தான் சிறியேன் மனது நவையாலே துடிக்கப் பார்த்து இங்கு இருந்தது காண்” என்றும் இயம்புகின்றார். ஆற்றாமையும் வியப்பும் மேலிடுதல் பற்றி, “ஐயோ இதற்குத் துணிந்ததுவோ” என வுரைக்கின்றார்.
தனால், இறைவன் பேரருளின் பெருமை நினைந்து வியந்தவாறாம். (10)
|