3333. கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும்
கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த்
திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத்
தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே
ஐயோ துணிந்தாயோ.
உரை: கல்லும் குழைந்துருகுமாறு அருட் பார்வை செலுத்தும் பேரருட் கடலாகிய பெருமானே, இரவும் பகலும் நான் உனது திருவருட் குறிப்பை எதிர்நோக்கிய வண்ணமிருந்து பெறாமையால் வருந்தித் தளர்கின்றேன்; ஆனால், உயிர்களை இரக்கமின்றிக் கொல்லும் செயலைப் புரியும் கொடுமையை யுடைவர்க்கு உதவி செய்யும் சிறு தெய்வங்களின் மனம் போல இரக்கம் காட்டும் ஒரு சொல்லும் வழங்காத வன்கண்மை நினக்கு எவ்வாறு உண்டாயிற்றோ? ஐயோ. எ.று.
கனிதல் - குழைதல். அருட் பார்வையின் கனிவைப் புலப்படுத்தற்குக் “கல்லும் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலே” என்று கூறுகின்றார். வழங்கக் குறை படாதது அருட் செல்வம் என்றற்குக் “கருணைக் கடலே” எனச் சிறப்பிக்கின்றார். அல் - இராக் காலம். திருக்குறிப்பு - திருவருள். எப்பொழுதும் எதிர்பார்த்த வண்ணமிருந்து பெறாமையால் மனம் சோர்வுறும் நிலைமை யுரைத்தற்கு “அல்லும் பகலும் திருக்குறிப்பை எதிர் பார்த்திங்கே யயர்கின்றேன்” என்று கூறுகின்றார். உயிர்க்கொலை புரிந்தொழுகும் கான வேட்டுவரும் குன்றக் குறவரும் சிறு தெய்வங்களைப் பரவி வாழும் திறங்களை நூல்கள் கூறுவதும், நாட்டில் மக்கள் பலர் செய்வதும் கண்டு, “கொல்லும் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர்” எனக் குறிக்கின்றார். வேட்டுவர் வாழிடம் குறும் பெனப்படுதலின், அவர் வழிபடும் தெய்வமும் குறும்புத் தேவர் எனப்படுகின்றனர். கொலை வினையை யூக்குதல் பற்றி, குறும்புத் ேதவர் மனம்போலச் சொல்லும் இரங்கா வன்மை” எனச் சொல்லுகின்றார். இரக்கம் காட்டும் சொல்லும் வழங்காமை தோன்ற, “சொல்லும் இரங்கா வன்மை” என மொழிகின்றார். வன்மை - வன்கண்மை. மென்கட் செல்வமாகிய அருளே யுருவாகிய சிவபெருமான்பால் தாம் காணும் வன்கண்மை இயல்பன் றென எண்ணுகின்றாரதலால், “வன்மை கற்க எங்கே துணிந்தாயோ” என்று வருந்துகின்றார். வன்கண்மை ஆகாத தொன்றாதலின், “ஐயோ” என அவலிக்கின்றார்.
இதனால், சிவன்பால் வன்கண்மை கண்டு வருந்தியவாறாம். (11)
|