3334. படிமேல் ஆசை பலவைத்துப் பணியும்
அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால்
இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ
பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் ஆசை அல்லால்வே றாசை
ஐயோ அறியேனே.
உரை: மண்ணுலகிற் பல பொருள்களின் மேல் ஆசையுற்றுப் பணிந்து போற்றுவோர் பலருக்கும் அன்புகூர்ந்து செல்வ நிலையுண்டாகத் திருவருள் செய்கின்றாய்; அதே நிலையில் எனது ஆசைக் கிரங்கி அருள் செய்கின்றாயில்லை; திருநீற்றுப் பொடியைத் திருமேனி மேல் அணியும் பெருமானாகிய நினது திருவருட்கு இஃது அழகாகாது; மேலும் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் உன்னுடைய திருவடி மேலன்றி வேறு எதன் மேலும் எனக்கு ஆசை கிடையாது. எ.று.
படி - மண்ணுலகம். ஆசைப்படும் பொருள் பலவாதலின், ஆசையும் பலவாம். ஒரு பொருள் மேல் ஓர் ஆசை வைத்துப் பரவுவோர்க்கு உதவுதல் ஒக்கும்; பல பொருள் மேல் பல ஆசை பல வைத்துப் பணிபவர்க்கும் அருள் வழங்குகின்றாய் என்பாராய், “ஆசை பல வைத்துப் பணியுமவர்க்கும் பரிந்து சுகக்கொடி மேலுறச் செய்தருள்கின்றாய்” என வுரைக்கின்றார். சுகக் கொடி - இன்ப வொழுங்கு. இது சுகவொளியென்றும் சுகப்பிரபை யென்றும் வழங்கும். ஆசை பலவாயின் மன வொருமை கெடுதலின் அது தீது என்பர் அறிஞர். அத்தகைய குற்ற முடையவர்க்கும் அருள் புரிகின்ற பெருமானாகிய நீ ஒராசை கொண்டு உழல்கின்ற எனக்கு அருள்கின்றிலை என்பாராய், “என்பால் இரக்கம் கொண்டிலையே” என்று கூறுகின்றார். பொடி - வெண்மையான திருநீறு. “பொடியார் மேனியனே” (கடவூர்) என நம்பியாரூரர் புகழ்வது காண்க. முறை மாறி யருளுவ தழகன்று என்றற்கு “நின்அருட்கு இதுதான் அழகோ” என முறையிடுகின்றார். பொது - தில்லையம்பலம். கூத்தாட எடுத்த திருவடி உயிர்கட்கு அருள் புரிவதே கருத்தாகக் கொண்டதெனப் பெரியோர் கூறுதலால், “பொதுவில் நடிக்கும் அடிமேல் ஆசையல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே” என இசைக்கின்றார். “தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டதே” (கோயில்) எனத் திருநாவுக்கரசர் எடுத்தோதுவது காண்க.
இதனாற் படிமேல் ஆசை பல கொண்டார்க்கு அருள்கின்ற நீ திருவடி மேல் ஒராசையொன்றே கொண்ட எனக்கு அருளாமை நன்றன்றென முறையிட்டவாறாம். (12)
|