3335. நாயேன் உலகில் அறிவுவந்த நான்தொட்
டிந்த நாள்வரையும்
ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த்
திருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே
தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங்
கிருக்கத் துணிவேனே.
உரை: எனக்குத் தாயாகும் பெருமானே, தில்லையம்பலத்தில் திரு நடனம் செய்கின்ற எந்தையே, நாய் போற் கடைப்பட்ட யான் இவ்வுலகில் எனக்குரிய உண்மையறிவு தோன்றிய நாள் தொடங்கி இந்நாள் வரையில் பிறவற்றில் பொருந்தாமல் உன்னுடைய அருட் குறிப்பையே எதிர்பார்த்திருக்கின்றேன்; திருவருளை நீ நல்காயாயின் இறந் தொழிவதன்றி, ஐயோ, எதனைப் பற்றாகக் கொண்டு இவ்வுலகில் வாழ்ந்திருக்க நினைப்பேன். எ.று.
உலகுயிர்கட்கு உருவும் பொருளும் படைத்தளித்தல் பற்றி, “என்னுடைய தாயே” என்றும், அறிவொளி நல்குதலால் “எந்தாய்” என்றும் இசைக்கின்றார். தில்லையம்பலத்துக்குப் பொது என்பது ஒரு பெயர். தாழ்வுடைமை புலப்படுத்தற்கு “நாயேன்” என வுரைக்கின்றார். தாழ்வுடைமை சைவ நெறிக்கு இன்றியமையா தென்பர். “தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது” (சிவ. சித்தி) என அருணந்தி சிவனார் கூறுவர். மக்களினத்துக்குப் பிறந்த பின் பொறியறிவு ஓரளவு தோன்றி வளர்ந்த பின்பே ஓர்ந்துணரும் உண்மையறிவு ஒளிர்தலால், “உலகில் அறிவு வந்த நாள் தொட்”டென வுரைக்கின்றார். இதற்கிது வெனப் பேசும் திறம் உண்மையுணர்வின் பயனாதலால் காரைக்காலம்மையார், “பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்” (திருவந்) எனத் தெரிவிக்கின்றார். திருவருட்கு வேறாய பொருளறிவைப் “பிறிது” என்றும், அதனைத் தாம் நயவாமை புலப்பட “ஏயேன்” என்றும் இயம்புகின்றார். குறிப்பு - திருவருள். ஞானம் - அவ்வப்போது தோன்றி மயக்கம் போக்கினமையின், “குறிப்பே எதிர்பார்த்திருந்தேன்” என்று கூறுகின்றார். திருவருளறிவு துணையாக எய்தாதாயின் தமக்கு உலகில் வாழ்வில்லை என்று வற்புறுத்துவாராய், “தயவு தாராயேல் மாயேன் எது கொண்டு வாழ்ந்து இங்கிருக்கத் துணிவேன்” எனச் சொல்லுகின்றார். மாய்தல் - இறைத்தல். அருட் குறிப்பில் வழி எய்தும் ஏதம் நினைந்து அஞ்சுதல் விளங்க, “ஐயோ” என்கின்றார்.
இதனால், வாழ்க்கைக்குத் திருவருட் குறிப்பு இன்றியமையா தென தெரிவித்தவாறாம். (13)
|