3336. நயத்தால் உனது திருவருளை நண்ணாக்
கொடியேன் நாய்உடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற்
பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன
வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின்
றேன்எம் பரஞ்சுடரே.
உரை: மேலாய ஞான விளக்கமாகிய பெருமானே, அன்பால் உன்னுடைய திருவரு ணெறியைப் பொருந்தாமையாற் கொடியனாகிய யான் நாய்த் தன்மை பொருந்திய எனது இவ்வுடம்பை உய்ந்து நிற்க விடாமல் அழித்து மாய்த்து விடுவேன்; அவ்வாறு செய்தால் பின்னரும் இவ்வுலகத்தில் வினை வயத்தால் எந்தவுடம்பு வந்தடையுமோ? யாது வருமோ என்ற அச்சத்தால் இவ்வுடம்பைச் சுமந்து திரிகின்றேன். எ.று.
ஒளிதரும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் ஞான அருளொளி பரப்பும் பரம்பொருளாதலின், சிவனைப் “பரஞ்சுடரே” எனவும், அதற்குத் தமது உரிமை புலப்படுத்த “எம் பரஞ்சுடரே” எனவும் எடுத்துரைக்கின்றார். ஞானப் பேற்றுக்கு ஒத்தது தூய அன்பாதலால் “நயத்தால்” என்றும், திருவருள் காட்டும் ஞான நெறியன்றிப் பிற வெல்லாம் கோடிய நெறியினவாதலுணர்த்தத் “திருவருளை நண்ணாக் கொடியேன்” என்றும் இயம்புகின்றார். இழிவு குறித்தற்குத் தமது தேகத்தை “நாயுடம்பு” என நவில்கின்றார். உயவைத்தலாவது உணவும் உடையும் மருந்தும் தந்து பேணுதல். செய்வது திண்ணிதின் விளங்க, “மடித் தொழிவேன்” என வெறுத்துரைக்கின்றார். செய்யாமைக்குக் காரணம் கூறுவாராய், “மடித்தாற் பின்னர் உலகத்தே எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற” பயம் தடுக்கின்றது எனவும், உடம்பு வினை வழி வருவதென அறிந்தோர் கூறுதலால், “வயத்தால் எந்த உடம்புறுமோ” எனவும், மக்களுடம்பன்றி வேறு உயிரினத்து உடம்பு எய்தலாமாகலின், “என்ன வருமோ” எனவும் இயம்புகின்றார். “இப்பிறவி தப்பினால் எப்பிறப் பெய்துமோ, யாது வருமோ” எனப் பிற பெரியோரும் கூறுவது காண்க. உடம்பு மாறும் என்ற அச்சம் காரணமாக இவ்வுடம்பை மாய்க்கமல் ஓம்புகின்றேன் என்பாராய், “பயத்தால் இவ்வுடம்பைச் சுமக்கின்றேன்” எனத் தெரி யவுரைக்கின்றார்.
இதனால், திருவருள் நாட்டம் பெறாதவுடம்பை மாய்க்க எண்ணி மாட்டாமை விளக்கியவாறாம். (14)
|