3337.

     இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா
          தேறி யிருக்கின்றார்.
     வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ
          டுறவு வழங்கிஉன்றன்
     அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப்
          பாடி அடுத்தவினைத்
     துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண்
          டிருக்கத் துணிந்தேனே.

உரை:

     பெருமானே, உன்னுடைய அடியவ ரெல்லாரும் இன்ப மார்ந்து தாழ்வின்றி யுயர்ந்து விளங்குகின்றார்களாக, அன்பில்லாத வன்பர் குழலிற் பல முறையும் சென்று கூடி அவருடைய தொடர்பு கொண்டு உனக்கு அன்பராகிய நன்மக்கள் கூட்டத்தின் நீங்கி உலகிய லின்பத்தை ஆடியும் பாடியும் நுகர்ந்தும், என்னைச் சூழ்ந்த வினைக்கேற்பத் துன்பம் தோன்றி மிக்குறத் தாக்கிய போதும் சோறுண்டு உடல் வளர்ப்பதையே குறிக் கொண்டிருந் தொழிந்தேன். எ.று.

     சிவனடியார் சிவனையே நினைந்து திருவருளின்பத்தை நுகர்ந்து ஞான வாழ்வில் முறையே உயரந்தோங்கினமை காண்கின்றாராகலின், “இன்பம் மடுத்து உன் அடியரெலாம் இழியா தேறியிருக்கின்றார்,” என வுரைக்கின்றார். குற்றம் செய்து தாழ்வுபடாது ஞான வொழுக்கத்தால் மெய்யின்ப மெய்தி இருப்பது பற்றி, “இன்பம் மடுத்” தென்றும், “இழியா தேறி யிருக்கின்றா” ரென்றும் இயம்புகின்றார். வன்பர் - சிவன்பால் அன்பு கொள்ளாத வன்மனமுடையவர். அவருடைய உறவாலும் நட்பாலும் ஞான வின்பம் பெறா தொழிந்தமையை, “வன்பரிடத்தே பல காற் சென்று அவரோடு உறவு வழங்கி” என்றும், “உன்றன் அன்பர் உறவை விடுத்து” என்றும் இசைக்கின்றார். பல்காற் சென்று பயின்றதனால், உறவு தோன்றியதும், வன்பர் உறவால் நல்லன்பர் உறவு நீங்கியதும் புலப்பட, “பல்காற் சென்று” எனவும், “அன்பர் உறவை விடுத்” தெனவும் வருந்தியுரைக்கின்றார். சிவஞான வாழ்விற் கருத்துச் செல்லாமல் உலகியற் போகங்களில் சென்று தோய்ந்தமை காட்ட, “உலகில் ஆடிப் பாடி” என்றும், அதனால் துன்பமே பெற்றமையுணர்த்தற்கு “அடுத்த வினைத் துன்பம் முடுகிச் சுடச் சுடவும்” என்றும், உலகியற் போகத்தை வெறாது தொடர்ந்து நுகர்வதற்கே நினைவு செல்வது கூறுவாராய், “சோறுண்டிருக்கத் துணிந்தேன்” என்றும் சொல்லுகின்றார். “மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும், பொய்யனேன் நான் உண்டுடுத் திங்கிருப்ப தானேன்” (சதகம்) என மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க.

     இதனால், திருவருணெறி நோக்காது உலகியல் நெறியில் தோய்ந்து துன்புறுகின்றமை சொல்லியவாறாம்.

     (15)