3338. எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால்
இரங்கி அருளுதலோ
அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி
எண்ணி அலமந்தேன்
சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா
ளான திலைஐயோ
முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன
நாணம் முடுகுவதே.
உரை: திருவருட்குத் தனிமுதலாகிய பெருமானே, எளியவனாகிய என்னிடத்து இரக்கமுற்றுத் திருவருள் ஞானம் நல்கும் நாள் எந்த நாளோ, அறியேன்; அந்த நாள் இந்த நாள் என்று ஒவ்வொரு நாளையும் நினைந்து ஏமாந்து வருந்துகிறேன்; கழிந்த நாட்களில் ஒரு நாளும் திருவருள் பெற்று நன்னாளாக அமைந்ததில்லை; முன்னொருநாள் என்னை ஆட்கொண்டாய் என்று எண்ணுதற்கும் நாணம் மிக்குத் தடுக்கின்றது, காண். எ.று.
திருவருள் ஞான வின்பமே யுருவாகக் கொண்ட பெருமானாதலால் சிவனைக் “கருணைத் தனிமுதல்” எனச் சாற்றுகின்றார். அவன் நல்குவது அத்திருவருள் ஞானானந்தமாதலால், அந்த நாளே வாழ்நாட்களில் சிறந்த நன்னாளாகும்; அஃது எப்போது எய்துமோ என வேண்டுகின்றமையின், “என்பால் இரங்கி யருளுதல் எந்நாள்” என விண்ணப்பிக்கின்றார். அருள் புரியும் நாள் முன்னுறத் தெரியாமையால், “அந்நாள் இந்நாள் இந்நாள் என்று எண்ணியலமந்தே” னென்கின்றார். அலமரல் - ஏமாற்றத்தாற் கலங்குதல். அடுக்கு ஆர்வ மிகுதி குறித்தது. கழிந்த நாட்கள் ஒவ்வொன்றையும் திருவருட் பேற்றுக் கமைந்த நன்னாளாக எண்ணி எதிர்நோக்கியும் அஃது எய்தா தொழிந்தமையின் வருத்த முற்றது கூறுவாராய், “சென்னாட்களில் ஓர் நன்னாளும் திருநாளான திலை” எனவும், அதனை நினைக்கும் போது துக்கம் மிக்கமை புலப்பட, “ஐயோ” எனவும் இயம்புகின்றார். உலகியற் சூழலிற் புகுந்து கிடந்த போது முன்பொருநாள் திருவருள் ஞான முண்மையும் அது நல்கும் இன்பமும் காட்டிய நலத்தை “முன்னாள் என்னை யாட்கொண்டாய்” என்றும், வழி நாள் ஒன்றிலும் அது மீள எய்தாமையின் அதனை நினைத்தற்கு நெஞ்சம் வெள்குகின்றது என்பாராய், “ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே” என்றும் மொழிகின்றார். முடுகுதல் - ஈண்டு பெருக்கித் தடை செய்தல்.
இதனால், வழி நாள் ஒன்றிலேனும் நல்கி வற்புறுத்தாமையின் முன்னாள் அருள் செய்து ஆட்கொண்டாய் என்று நினைத்தற்கும் நெஞ்சம் நாணமுறுகிற தென வுரைத்தவாறாம். (16)
|