3339. எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய்
நீதான் இரங்குவையோ
அந்த வகையை நான்அறியேன் அறிவிப்
பாரும் எனக்கில்லை
இந்த வகைஇங் கையோநான் இருந்தால்
பின்னர் என்செய்வேன்
பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும்
உண்மைப் பரம்பொருளே.
உரை: பற்று வகைகளைத் துறந்த பெரியோர் திருவுள்ளத்தில் எழுந்தருளும் உண்மைப் பரம்பொருளாகிய சிவனே, யாது செய்தால் எந்தையாகிய நீ சிந்தையில் அருள்கூர்ந்து என்பால் இரக்கம் கொள்வாயோ, அதனை நான் அறியேன்; அதனை எனக்கு அறிவிக்கத்தக்க பெரியவர்களும் இல்லை; இங்கே இவ்வாறு நான் இப்போது கிடந் தொழிவேனாயின், பின்பு நான் யாது செய்ய வல்லவனாவேன். எ.று.
பந்தம் - பற்று. யான் எனதென்னும் இருவகைப் பற்றும் இல்லாத தூயவர் உள்ளமே ஞானத் திருவம்பலம் என்று பெரியோர் உரைத்தலால், “பந்த வகையற்றவர் உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே” என்று புகல்கின்றார். உடல் பொருள் உயிர் எனவும், உற்றார் உறவினர் நண்பர் எனவும் நிற்கும் தொடர்புகளைப் பாசம் என்றலுமுண்டு. அனாதிமுத்த சித்துப் பொருளாதல் விளங்க, “உண்மைப் பரம் பொருள்” என்று இயம்புகின்றார். திருவருள் ஞானப் பேற்றுக் கெனச் சரியை முதலாகப் பல கூறுபவாதலின், “எந்த வகை செய்திடிற் கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ? எனக் கேட்கின்றார். இந்தச் செயல்தான் திருவருட்பேற்றுக் குரியதெனத் திட்டவட்டமாகத் தெரியேன் என்பாராய், “அந்த வகையை நான் அறியேன்” என்றும், அறிந்தவருள் யாரும் எனக்கு உரைக்கச் சமைந்தவர் இங்கேயில்லை என்றற்கு “அறிவிப்பாரும் எனக்கில்லை” என்றும் எடுத்துரைக்கின்றார். அறிவதுமின்றி அறிவிக்கப்படுவதுமின்றி அறியாமை இருளிற் கிடந்து உழல்வேனாயின் என் பிறப்பு பயனின்றிக் கெடுவதாம் என்பாராய், “இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன்” என முறையிடுகின்றார்.
இதனால், திருவருள் ஞானப் பேற்றுக்குரிய நெறி முறைகளை அறியாமையும் அறிவிப்பார் இல்லாமையும் எடுத்தோதி அருள் நெறி வழங்குக என வேண்டியவாறாம். (17)
|