3341. எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம்
என்றால் என்செயல்கள்
எல்லாம் நினது செயல்அன்றோ என்னே
என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும்
உன்றன் மயம்அன்றே
நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார்
எங்கள் நாயகனே.
உரை: எங்கட்கு நாயகனே, எல்லாமுடைய பெருமானே, உலகிற் செய்யப்படும் செயல்களனைத்தும் நின் செயலே எனப்படுகின்றன எனப் பெரியோர் கூறுவ துண்மையாயின் யான் செய்யும் செயல்கள் யாவும் நின்னுடைய செயல்களாகு மன்றோ? அற்றாக, என்னை யேலாது புறம் தள்ளுவது எங்ஙனம் அமையும்? எல்லாம் வல்லவனே, என்னைப் புறம் போக விடுவாயாயின், புறம் என்பதும் நீ நிறைந்த விடமன்றோ? இதனை நன்கறிந்த நல்லறிஞர் அனைவரும் எங்கும் எல்லாம் சிவமயம் என்று நவில்கின்றார்கள், காண். எ.று.
உலகும் பொருளும் பொருளின் புடை பெயர்ச்சியாகிய செயலும் யாவும் சிவன் செயல் என்பது ஆன்றோர் கருத்தாதலின், “எல்லாமுடையாய் நின் செயலே எல்லாம் என்றால்” எனக் கூறுகின்றார். எல்லாம் நின் செயலாயின், யான் செய்யும் செயல் யாவும் நின் செயலே யாம் என்பார், “என் செயல்கள் எல்லாம் நினது செயலன்றோ” என வுரைக்கின்றார். அங்ஙனமாயின் என்பால் நிகழும் செயல்களை நோக்கி என்னை அருளாமல் புறத்தே விலக்குவது என்ன முறையா மென்பார், “என்னே என்னைப் புறம் தள்ளல்” என வினவுகின்றார். நின்னுடைய நிறைந்த நிறைவுக்கு - வியாபகத்துக்கு அகம் புறம் என வேறுபாடு இல்லையாதலால், புறம் என்பது நினது நிறைவுள் அடங்கியதாகலின் புறம் போக்குதல் இல்லை காண் என்பார், “புறத்தும் உன்றன் மயமன்றோ” என வுரைக்கின்றார். அன்றே என்பது ஆம் என்னும் பொருளது. இவ்வுண்மைக்குச் சான்று வேண்டுமெனில், “நல்லார் எங்கும் சிவ மயம் என்று உரைப்பார் காண்” என்று நவில்கின்றார்.
இதனால், எல்லாம் சிவன் செயல், எங்கும் சிவமயம் என்ற அருளுரைகளின் நயம் கண்டவாறாம். (19)
|