3342. கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப்
பொழுதே குறிப்பித்து
வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து
வாழ்வித் திடல்வேண்டும்
பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே
றில்லைப் பரவெளியில்
ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை
முக்கால் ஆணையதே.
உரை: சான்றோர் பாடும் புகழை யுடைய சிவபெருமானே, இப் பொழுதே நின் திருவருளைக் கூடுதற்குரிய அருட் குறிப்பைத் தெரிவித்து, அது பெறாமல் வாடி வருந்தும் சிறுமை யுடையவனாகிய எனது வருத்தமனைத்தையும் போக்கி நினது அருளில் வாழச் செய்தல் வேண்டும்; நின்னை யொழிய எனக்குத் துணையாவார் வேறு யாவருமில்லை; மாயா மண்டலத்துக்கு மேலுள்ள ஞான வெளியில் ஆனந்தக் கூத்தாடும் திருவடி மேல் முக்காலும் ஆணையாகச் சொல்லுகின்றேன். எ.று.
எல்லாம் வல்ல சிவ பரம்பொருளின் திருவருட் குறிப்பின்றி ஓரணுவும் அசையாதாகலின், உயிர்கள் திருவருளைக் கூடுதற்கு அப்பெருமானது அருள் வேண்டப் படுதலால் கூடும் கருணைத் திருக்குறிப்பை “இற்றைப் பொழுதே குறிப்பித்” தருளல் வேண்டும் என்று கூறுகின்றார். உலகியல் வாழ்வில் உளதாகும் வருத்த மிகுதி கூறி இப்பொழுதே திருவருளிற் கூடும் குறிப்பை யருளுக என முறையிடுகின்றமை புலப்பட, “இற்றைப் பொழுதே குறிப்பித்து” எனக் கூறுகின்றார். வாடும் வாட்டம் என்பது உலகின்கண் உளவாகும் பிறவித் துன்பங்களால் எய்தும் வருத்தம். இத் துன்பங்கள் அறிவைச் சுருக்கிச் சிறுமை யுறுவிக்கின்றனவாகலின், சிறுமை யுறாத திருவருள் வாழ்வில் உய்த்தல் வேண்டுமென்றற்குச் “சிறியேன் வாட்டமெலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும்” என விண்ணப்பிக்கின்றார். திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பாடிய பாடுபுகழ் பெற்ற பரமனாதலால், “பாடும் புகழோய்” எனப் பரவுகின்றார். தமக்கு வேண்டிய அருளின்ப வாழ்வு நல்குதற்குச் சிவபிரானை யல்லது வேறு பிறர் இல்லை யென்பார், “நினையல்லால் துணை வேறில்லை” என்றும், இது முக்காலும் உண்மை யென வற்புறுத்துவாராய், “பரவெளியில் ஆடுஞ் செல்வத் திருவடி மேல் ஆணை முக்கால் ஆணையதே” என்றும் இயம்புகின்றார். சுத்தம் அசுத்தம் எனப்படும் இருவகையும் தன்னுட் கொண்ட மாயா மண்டலத்துக்கு மேலது பரவெளியென அறிக. இதனைச் சிதாகாசப் பெருவெளி என்பதுமுண்டு. இப் பெருவெளியில் இறைவன் ஞானத் திருக்கூத்து இயற்றுகின்றானாதலின், “பரவெளியில் ஆடும் செல்வத் திருவடி” என மொழிகின்றார்.
இதனால் திருவருளின்ப வாழ்வு அருளுக என முடையிட்டவாறாம். (20)
|