3345.

     விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின்
          மிகஇனிக் கின்றநின் புகழ்கள்
     வழுத்தலை அறியேன் மக்களே மனையே
          வாழ்க்கையே துணைஎன மதித்துக்
     கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்
          கொக்கனேன் செக்கினைப் பலகால்
     இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன்
          என்னினும் காத்தருள் எனையே.

உரை:

     விழுமிதாய் உயர்ந்த நன்னெறியை விரும்பாத யான், கரும்பின் சாற்றினும் மிகவும் இனியவாகின்ற நின்னுடைய புகழ்களை எடுத்தோதுவதை நினையாமல் மக்கள் மனைவியாகிய இவர்களோடு கூடி வாழும் வாழ்க்கையே உயிர் துணையாம் எனக் கருதிக் கொழுத்து அலைகின்ற மனத்தையுடைய புழு மிக்க தலையையுடைய புலைய னொப்பவனும் கொக்குப் போல்பவனும் செக்கினைப் பன்முறையும் சுற்றிச் சுற்றி இழுக்கும் தொழிலையுடைய எருது போல்பவனாய்த் துன்ப முறுதலையே யுடையவனும் ஆயினேனாயினும் என்னை வெறுக்காமல் காத்தருளல் வேண்டும். எ.று.

     விழுத்தலை நெறி - உயர்ந்த தலையாய நன்மை விளைவிக்கும் அறிநெறி. விழுப்பம் - உயர்வு; விழுப்பத்தை நல்கும் தலையாய அறநெறி எனினும் பொருந்தும். அம்மைக்குரிய விழுத்தலை நெறியை விரும்பேனாயினும் மறுமை அம்மை நலங்களைப் பயக்கும் நின் பொருள் சேர் புகழ்களை எடுத்தோதுவதையும் செய்யேன் என்பார், “கரும்பின் மிக இனிக்கின்ற புகழ்கள் வழுத்தலை யறியேன்” என வுரைக்கின்றார். இறைவன் புகழ்களை மனத்தால் நினைக்கும் போதும் நாவால் ஓதும் போதும் கரும்பின் சாற்றினும் இனிய தேன் ஊறி மகிழ்விப்பது பற்றி, “கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள்” எனக் கூறுகிறார். கரும்பு - கரும்பின் சாறு. புகழ்களை யோத வூறும் தேன் - கருப்பஞ் சாற்றினும் மிக்க இனிமை யுடையதென்பது கருத்து. இதனைச் “செந்தேன்” எனத் திருநாவுக்கரசரும், “ஊறாத அமிழ்” தென வில்லிபுத்தூரரும் எடுத்துரைக்கின்றார். வழுத்தல் - ஓதுதல்; சொல்லுதலுமாம். மனைவி மக்களுடன் கூடுய வாழ்க்கையிற் பிறக்கும் இன்பத்தால் உடல் பூரிப்பும் ஊன் தடிப்பும் உண்டாதலின், “மக்களே மனையே வாழ்க்கையே துணையென மதித்துக் கொழுத்தலை மனத்தேன்” என உரைக்கின்றார். தீய எண்ணங்கள் பல மனச் செருக்கால் தோன்றிக் கெடுத்தலால், “புழுத்தலைப் புலையேன்” எனப் புகல்கின்றார். புழுத்தலை - ஈரும் பேனும் நிறைந்த தலை. தலையைத் தூய்மையுறப் பேணுதற்கு நேரமின்றிக் கீழ்மைப் பணியில் ஈடுபடுவது விளங்க, “புழுத்தலைப் புலையேன்” என்கின்றார். புலையேன் -புலையனையொப்பேன். புலைத் தொழிலை யுடையேன் என்றுமாம். உறுபொருள் எய்துங் காறும் சோம்பி யிருக்குமாறு தோன்றக் “கொக்கனேன்” என்று கூறுகின்றார். “ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு” என்பர் பெரியோர். செக்கு - எள்ளினைப் பெய்து எண்ணெயாட்டும் பொறி. செக்கிழுக்கும் எருது சுழன்று வருதல் போல உயிர் வாழ்க்கை யொன்றே குறிக் கொண்டு அதனையே நினைந்து வருந்துதலை யுடையேன் என்பாராய், “செக்கினைப் பலகால் இழுத்தலை எருதேன் உழத்தலே யுடையேன்” என்று இயம்புகின்றார். எருதேன் என்பதைக் குறிப்பு முற்றெச்சமாய் உழத்தலே யுடையேன் என்பதனோடு இயைத்துக் கொள்க.

     இதனால், மனை வாழ்க்கை யொன்றையே குறிக் கொண்டு செக்கிழுக்கும் மாடு போல் வருந்தும் குற்றத்தை எடுத்தோதியவாறாம்.

     (3)