3347.

     கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன்
          கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த
     கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த
          கடையனேன் கங்குலும் பகலும்
     அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை
          அறவுண்டு குப்பைமேற் போட்ட
     நெட்டிலை அனையேன் என்னினும் வேறு
          நினைத்திடேல் காத்தருள் எனையே.

உரை:

     மாலைப் போதில் கொட்டிலுள் வந்து சேராது திரியும் பட்டி மாடு போன்ற யான் கொட்டைக் கரையையுடைய மெத்தையை விரித்து மேலே விதானமிட்ட படுக்கையில் கிடத்தலை விரும்பி அடிக்கடி சென்று படுத்துக் கொள்ளும் கீழ்மகனாய், இரவிலும் பகலிலும் சமையலறையைச் சூழ்ந்து அலையும் பூனை போல்பவனாய், பற்றற வுண்டு குப்பை மேலெறியப் பட்ட நீண்ட வாழையின் எச்சிலை போன்றவனுமாகியவனாயினும் என்னை வேறாகக் கருதிப் புறக்கணிக்காமல் காத்தருள வேண்டுகிறேன். எ.று.

     பகற் போதில் புன்செய்க் காடுகளை யடைந்து மேய்ந்து அந்தி மாலைக் கண் ஊரடைந்து தத்தம் மாட்டுக் கொட்டிலைச் சேர்வது முறையாயினும் அதனை விடுத்து எங்கும் ஓடித் திரியும் மாடு பட்டி மாடு எனப்படும்; அதுபோல் மனையவர்க் கடங்காது ஒழுக்கமின்றித் திரிபவன் என்று தம்மை இழித்தற் பொருட்டு, “கொட்டிலையடையாப் பட்டி மாடு அனையே” னென வுரைக்கின்றார். கொட்டில் - ஆனிரைகளை மடக்கிக் காக்கும் காவலிடம். மனைப் புறத்தே வளைத்தமைத்த இடம் கொட்டில். கோட்டில் என்றபாலது கொட்டில், கொட்டகை, கொட்டம் என வழங்கும். அடங்குதலின்றிக் கட்டகன்று ஓடும் மாடுகளைத் தொகுத்து அடைக்குமிடம் மாட்டுப் பட்டி; அதனால் அடங்கா தோடும் மாட்டைப் பட்டிமாடு என்கின்றனர். பட்டி - அடங்காததை ஒழுங்கிற்கு உட்படுத்தும் காவலிடம். மாட்டுப் பட்டிகள் பலவுடைய முல்லை நிலத்து ஊர்கள் பட்டி என்ற ஈறு பெற்ற பெயர்களையுடையவாம். ஆதலாற்றான், குறிஞ்சியும் முல்லையுமாகிய நாடுகளில் இவ்வூர்கள் மிக்கிருக்கின்றன. அடங்கா வொழுக்கத் தாடவனை “அகப்பட்டி” என்றும், பெண்மகளை “வாய்ப்பட்டி” என்றும் இகழ்கின்றார். கொட்டை - ஓரத்தில் அழகுறக் கோக்கப்படும் சுங்குகள். “கொட்டைக் கரைய பட்டுடை” எனச் சான்றோர் கூறுதல் காண்க. கொட்டை யணிந்த படுக்கை “கொட்டை” எனப்படுகிறது. மேலே விதானமிட்ட கட்டிலை “மேல் வளைத்த கட்டில்” எனக் கூறுகின்றார். பட்டினால் இயன்று உள்ளே இலவம் பஞ்சிட்ட மெத்தை பரப்பிய கட்டிலில் கிடந்து உறங்குதற்கு இன்பம் பயத்தலின், “கட்டிலை விரும்பி யடிக்கடி படுத்த கடையனேன்” எனவுரைக்கின்றார். உறங்கும் போதன்றி அடிக்கடிப் படுத்த விடத்துச் சோம்பலை விளைவித்து வினைக் கேடு பயத்தல் பற்றிக் “கடையேன்” என இழிக்கின்றார். கங்குல் - அட்டில்; உணவு சமைக்கும் மனைப்பகுதி. அடுதல் - சமைத்தல். அட்டிலாரது அற்றம் பார்த்துப் பால் கவர்ந்துண்பது பூனைகட்கு இயல்பாதலின், “அட்டிலை யடுத்த பூஞையே” னென்று கூறுகின்றார். உணவு பெய்தற்கு இடும்போது இருந்தவண்ணமே உண்டு கழியும் போதும் இருத்தல் நன்று என்பது சிலரது ஆசாரமாதலால், “அறவுண்டு” என்கிறார். உண்டது சிறிது எஞ்ச விடுவது நன்று என்பதும் ஒரு சிலர் கொள்கை. நெட்டிலை - ஈண்டு நீண்ட வாழையிலே மேற்று. உணவுப்பொருள் சிதறித் தரையில் வீழ்ந்து மாசுறாமை கருதி நெட்டிலை வேண்டப்படுகிறது. உண்டு கழிந்த இலை வேறு எதற்கும் பயன்படாதாதலால் குப்பையில் எறிவர்; குப்பையில் எறிந்த எச்சிலை போல் பயன்படாமையால் கழிக்கப் பட்டேன் என்றற்குக் “குப்பையிற் போட்ட நெட்டிலையனையேன்” என வுரைக்கின்றார்.

     இதனால், குப்பையி லெறிந்த எச்சிலை போலப் பயன்படாக் கடையேன் எனத் தம்மைப் பழித்துரைத்தவாறாம்.

     (5)