3348.

     நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில்
          நெருக்கிய மனத்தினேன் வீணில்
     போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன்
          புனைகலை இலர்க்கொரு கலையில்
     ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள
          உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன்
     ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன்
          என்னினும் காத்தருள் எனையே.

உரை:

     நேர்த்தியான நகைகளையணிந்த மங்கையரின் நெருங்கிய கொங்கைகளின் மேல் மிக்க ஆர்வமுறும் மனத்தினையுடைய யான், வீணே போர் தொடுக்கும் வெறுமை மக்களிடையே புகழ் பெற்ற பயனிலாளனாவேன்; உடுக்கும் உடையில்லாதவர்க்கு என்னுடைய உடையில் ஓர் நூலிழை வேண்டினும் கொடாதவன்; நீளமாகப் பல வுடுத்து ஊர் தோறும் திரிந்தேன்; அழகிய அணி வகைகளை விருப்புடன் பூண்டு மனம் மகிழ்ந்த வீணனாயினும் என்னைக் காத்தருள வேண்டும். எ.று.

     மகளிர் மார்பிற் கொங்கைகள் பருத்து இடைவெளியின்றி நெருங்கப் பணைத் திருத்தலைச் சிறப்பெனக் கருதுவர். “ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்” (போற்றி) எனத் திருவாசகம் ஓதுவது காண்க; அவர்களைக் காணும் ஆடவருள்ளமும் பார்வையும் அம்மகளிர் மார்பின்கட் சேர்தலின் “புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன்” என இசைக்கின்றார். நெருக்கம் - நெருக்கு என வந்தது. வீண்போர் - பயனின்றிச் செய்யும் வல்வழக்கு. வெறியர் - பயினில்லாதவர். வெறியரது பாராட்டை விரும்புதலால் யானும் பயனில்லாதவன் என்றற்கு “வெறியர் புகழ்பெறு வெறியேன்” என்று கூறுகின்றார். ஆடையில்லாத ஏழை மக்களை, “புனை கலையில்லார்” என்றும், கிழிந்த தமது ஆடையைத் தைத்தற்கு உடையில் ஒரு நூலிழை வேண்டினும் தர விரும்பாத தன்மையை உணர்த்தற்குக் “கலையில் ஓர் இழையேனும் கொடுத்திலேன்” என வுரைக்கின்றார். ஓர் இழை கொடுப்பதால் கேடு ஒன்றும் உண்டாகாதென்றற்குக் “கலை” எனக் குறிக்கின்றார். வேண்டும் அளவினும் மிக்கவுடை என்று புலப்பட, “நீளவுடுத்து” எனவும், ஊர்களில் வாழும் ஏழை மக்கள் காணத் திரிந்தமை தோன்ற “உடுத்துடுத்து ஊர்தோறும் திரிந்தேன்” எனவும் இசைக்கின்றார். அடுக்கு - அடிக்கடி மாறி மாறி வேறு வேறுடுத்தமை காட்டுகிறது. ஏரிழை - விலையுயர்ந்த அணிகலன். அணிகலன் பூண்டு ஒளிர்ந்த பெருமித முற்றேன் என்பாராய், “உளம் களித்தேன்” என வுரைக்கின்றார்.

     இதனால், உயர்ந்த ஆடையும் அணியும் பூண்டு செருக்கிய குற்றம் தெரிவித்தவாறு.

     (6)