3349.

     அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்
          அசடனேன் அறிவிலேன் உலகில்
     குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க்
          குழியிலே குளித்தவெங் கொடியேன்
     வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க
          மனங்கொண்ட சிறியனேன் மாயைக்
     களத்திலே பயின்ற உளத்திலே பெரியன்
          என்னினும் காத்தருள் எனையே.

உரை:

     உப்பளத்தில் கிடந்து உப்புப் பற்றிய சிறு துருப்பினும் பயனற்ற கடையவனாகிய யான், அசட்டுத் தன்மையும் அறிவின்மையும் உடையவன்; உலகில் குளிப்பவர் நன்னீர்க் குளத்திலே குளிக்க, வெவ்விய சிறுநீர் நின்ற குழியில் இறங்கிக் குளித்த கொடுஞ் செயல் உடையனாவேன்; வளமான பொருள்களை நுகர்ந்து மலரிதழ் பரப்பிய படுக்கையிற் கிடக்க ஆசை கொண்ட வறியவனாவேன்; உலகியல் மாயை மயக்கத்தில் ஆழ்ந்து பயின்ற வகையில் மிக்கவ னெனினும் என்னைக் காத்தருளல் வேண்டும். எ.று.

     அளம் - உப்பு விளைவிக்கும் நிலம். அந்நிலத்திற் கிடக்கும் துரும்பு உப்புப் பற்றி உப்பாகிய வழியும் உப்புக் கரைந்து தன் வடிவு பெற்ற வழியும் எதற்கும் பயன்படாது கெடுவது போல யானும் பண்பின்மையாற் கெட்டுக் கடைப் பட்டேன் என்பார், “அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்” என்று கூறுகின்றார். “உப்பு விளை பழனத்து உற்ற பொற்கோட்டு உலவை” (ஞானா. 74) எனப் பிறரும் காட்டுப. அசடன் - குற்றத் தன்மை யுடையவன். அசடு - மந்த புத்தியாற் குற்றம் செய்பவன். அறிவிலேன் - நல்லதன் நலமறியும் அறிவில்லாதவன். குளம் - நன்னீர் நிறைந்த நீர் நிலை. வெஞ்சிறுநீர்க் குழி - முடை நாறும் சிறுநீர் தேங்கும் குழி. சிறுநீர்க் குழியில் யாரும் இறங்கிக் குளியாராக, அந்த இழி செயலையும் நாணாது செய்யும் கொடுமை விளக்குதற்குச் “சிறுநீர்க் குழியிலே குளித்த வெங்கொடியேன்” என வுரைக்கின்றார். வளம் - செல்வ நிலை. பொசித்தல் - போகம் நுகர்தல்; இது புசித்தல் எனவும் வழங்கும். தளம் - மெல்லிய மலர்களின் இதழ் பரப்பிய படுக்கை. பேராசை நினைவுகளால் சிறுமை யுற்றவன் என்றற்கு “வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொண்ட சிறியேன்” எனக் கூறுகின்றார். மாயைக் களம் - உலகியல் மாயை நிலவும் வாழ்க்கை உலகியல் வாழ்க்கையில் பலதிறப்பட்ட நெறிகளில் ஒழுகியும் காண்பன கண்டும் முதிர்ந்தமை புலப்பட “மாயைக் களத்திலே பயின்ற உளத்திலே பெரியேன்” எனப் பேசுகின்றார். இதனையும் குற்ற வகைகளோடு சேர்த்துக் கூறுதலால், மாயா வுலக வாழ்க்கையில் நிலவும் குற்ற வகைகளிற் பயின்று அவற்றில் மிக்கோனாயினமை விளங்க இவ்வாறு கூறுகின்றாராயிற்று.

     இதனால், இழி தக்க சிறு செயல் புரிந்து பேராசையுற்றுக் குற்றப் பட்டமை தெரிவித்தவாறாம்.

     (7)