3350. தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத்
துதித்திலேன் தூய்மைஒன் றறியேன்
கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில்
கலந்துணக் கருதிய கருத்தேன்
பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த
பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன்
என்னினும் காத்தருள் எனையே.
உரை: எல்லாம் வல்ல சிவ பரம்பொருளே, உன்னைக் கண்டு தொழுது யான் துதித்ததில்லை; தூயனாம் தன்மைகளில் ஒன்றும் உடையவனல்லன்; பேய்கள் யாவும் திரண்டாற் போல்பவன்; உணவு கொள்ளுமிடத்து எய்தும் நெய்யத்தனையும் உணவிற் கலந்துண்ணும் கருத்துடையவன்; குற்ற வகை யாவையும் செய்து வீண் பொழுது கழித்த பாவியாவேன்; யான் செய்த தீமைகள் எழுதும் அளிவினவல்ல என எழுதுவோர் கூறுமாறு மிக்க குற்றங்களை யுடையேன்; இத்தகையனாயினும் என்னைக் காத்தருள்க. எ.று.
வரம்பில் ஆற்றலுடையவன் இறைவன் என ஆன்றோர் கூறுதலால், “எல்லாம் வல்ல கடவுளே” எனக் கூறுகின்றார். அகளமாகிய பரம்பொருளே சகள வுருவில் காட்சி தருதலால் அதனைக்கண்டு வழிக்கையாற் றொழுதலும், காணா விடத்து மனத்தில் நினைத்துத் துதித்தலும் வேண்டுதலால், அது செய்யாத குற்றத்தை “நின்னைத் தொழுது துதித்திலேன்” என்று சொல்லுகின்றார். கழுது - பேய். பேய்த் தன்மைகள் பலவும் உடையவன் என்பாராய், “கழு தெலாம் அனையேன்” என்றும் உணவின் கண் பேராசை யுறுவது குற்றமாதலால், “உணவில் இழுதெலாம் கலந்துணக் கருதிய கருத்தேன்” என்றும் இயம்புகின்றார். இழுது - உரைந்த நெய். பழுது - குற்றம். பெறலரியவற்றுள் காலம் தலைசிறந்ததாகலின், அதனை வீண் படக் கழித்த குற்றத்தை, “பொழுதெலாம் கழித்த பாவியேன்” எனவும், தீமைகளின் மிகுதி யுணர்த்தற்குத் “தீமைகள் சிறிதும் எழுதலாம் படித்தன்று என மிக வுடையேன்” எனவும் இசைக்ின்றார். என, எழுதுவோர் எழுதலாம் படித்தன்று என உரைக்க என விரித்துக் கொள்க.
இதனால், செய்த தீமைகள் எழுது மளவின அல்ல வெனத் தெரிவித்தவாறாம். (8)
|