3351.

     வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை
          மனைகவர் கருத்தினேன் ஓட்டைச்
     சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன்
          தயவிலேன் சூதெலாம் அடைத்த
     பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில்
          பெரியவர் மனம்வெறுக் கச்செய்
     எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன்
          என்னினும் காத்தருள் எனையே.

உரை:

     வாங்கிய கடனுக்காக வட்டியைப் பெருக்கித் தொகுத்து ஏழை மக்களின் வீடு வாயில்களைக் கவர்ந்து கொள்ளக் கருதும் மனத்தவனாகிய யான், இருப்பது துவாரப்பட்ட மண் சட்டியே என்றாலும், அதனைப் பிறர் பெறக் காண மனம் பொறாதவனும், இரக்கமில்லாதவனும், சூதும் வஞ்சனையும் நிறைந்த பெட்டி போன்ற மனமுடையவனும், உலகின்கண் உள்ள பெரியவர்களின் மனம் நொந்து வெறுக்கச் செய்கின்ற எட்டி மரத்தையும் மண்ணாங் கட்டியையும் ஒத்தவனுமாவேன்; ஆயினும் என்னைக் காத்தருள வேண்டும். எ.று.

     வட்டி, கடன் வாங்கினோர் அதனைக் கொடுத்து உதவியர்க்குத் தரும் பலிசை. ஆறு மரக்கால் நெற்கடன் பெற்றார் ஆண்டிறுதியில் கொடுதார்க்கு ஒரு மரக்கால் மிகுதியாகத் தரும் பலிசை; நெற் பலிசையை வட்டியில் அளந்து தருவது பண்டையோர் வழக்கம். ஒரு வட்டி ஒரு மரக்கால் அளவினதாகும். வட்டி பாண்டி நாட்டிற் பெட்டி யென வழங்குகிறது; இஃது ஓலையாலும் பனையகணிகளாலும் பின்னப்படுவது. சோழ நாட்டில் வட்டியைக் கூடை யென்பர். “வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணரூர” (நற். 210) எனச் சான்றோர் குறிப்பது காண்க. பலிசை யளந்த வட்டியே நாளடைவில் பலிசைக்குப் பெயராயிற்று; பின்பு பலிசை மறையவே வட்டியே எங்கும் நெற் பலிசை, பொருட் பலிசை, பொற் பலிசை முதலிய எல்லாவற்றிற்கும் பெயராய் நிலவுகிறது. வட்டிக் கணக்கைப் பெருக்கி முதலொடு கூட்டி வரும் தொகையைக் கடன் பட்டார் திரும்பத் தரும் வன்மை யிழந்து தாம் உடைய வீடு நிலங்களைக் கடன் கொடுத்தார்க்கோ பிறர்க்கோ விற்று நாடோடிகளாவது மரபு. கடன் தந்து வட்டி வாங்கும் முறைமையால் கெட்ட குடிகள் எண்ணிறந்தனவாதலால், அக் கொடுமைக் குற்றத்தை எடுத்துக் காட்டற்கு “வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன்” என்று கூறுகின்றார். பிறர் ஆக்கம் கண்டு மகிழ்தலின்றி மனம் பெறாது தீது செய்வது குற்றமாகும்; அதுவும் மக்களிடையே பெருகி யிருப்பது காண்டலின், “ஓட்டைச் சட்டியேயெனினும் பிறர் கொளத் தரியேன்” என வுரைக்கின்றார். ஓட்டை - துவாரம். கையாளும் பாத்திரங்களில் ஓட்டை யுண்டாயின், ஓட்டைப் பாத்திரம் என்பர். பிறர் காணா வகை நெஞ்சின் கண் நிறைத்திருப்பது பற்றி, “பெட்டியே நிகர்த்த மனத்தினேன்” என்கின்றார். கயப்புச் சுவைக்குத் தலையாய பொருளாதலின், எட்டி மரத்தைக் குறித்து “எட்டி” என்றும், சுவை யில்லாத மண் திரளை “மண்ணாங் கட்டி” என்றும் ஏசுகின்றார்.

     இதனாற் வட்டிக் கடன் பட்டோரை வருத்தும் குற்றம் விளக்கியவாறாம்.

     (9)