3354.

     சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன்
          துன்னுநல் தவம்எலாஞ் சுருங்கி
     ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என்
          றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
     போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில்
          பொருந்திய காரசா ரஞ்சேர்
     சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை
          தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தை பெருமானே, ஒருவனுக்கு உண்ணும் உணவிலே மிக ஆசையுண்டாயின் அவன் மேற் கொள்ளும் நல்ல தவங்கள் யாவும் நீர் பெருகி யோடும் ஆற்றில் கரைத்த புளியைப் போல நில்லாது கெட்டொழியும் என்று நல்லறிஞர் உரைத்த அறிவுரையைச் சிறிதும் கருத்திற் கொள்ளேனாய், பெருமானாகிய உன்னையும் வழிபடாமல் சுவை யமைந்த காரமும் சாரமும் உடைய சாறு பெய்த சோற்றில் ஆசை மிக்கழுந்தினேன் இனி என்ன செய்வேன். எ.று.

     பல்வகைச் சுவை கலந்த உணவின் மேல் ஆசை கொண்டலைபவற்கு உழைப்பின் கண் விருப்பும் ஊற்றமும் உண்டாகாதென அறிஞர் உரைப்பதைக் கொண்டெடுத்துக் கூறுகின்றாராதலின், “சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னும் நல்தவம் எலாம் சுருங்கி ஆற்றிலே கரைத்த புளி யென போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும் போற்றிலேன்” என்று புகல்கின்றார். சோறு எனப் பொதுப்பட மொழியினும் பல்வகைச் சுவை விரவிய உண்பொருளைக் குறிப்ப தெனக் கொள்க. நல்தவம் - நற் பயன் விளைவிக்கும் இனிய அரிய முயற்சி. சோற்றாசை காமமும் நோயும் தோற்றுவித்து அறிவைச் சிதைத் தொழிக்கும் என்று பெரியோர் கூறுப. “தீயளவின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோய் அளவின்றிப் படும்” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. இம்மை மறுமையாகிய வாழ்வுகட் குரிய நற்பயனை நல்கும் இனிய உயரிய முயற்சிப் பயன்களைச் செய்தற்கு வேண்டும் ஆர்வம் ஊக்கம் ஆகியவை சிந்தைக்கண் உண்டாகாமற் கெடுக்கும் என்பது உணர்த்துதற்குத் “துன்னும் நல்தவ மெலாம் சுருக்கும்” எனவும், ஒருகால் தவ முயற்சி உண்டாயினும், உணவு ஆசையால் அது நில்லாது கெட்டும் போம் என்பதை விளக்க, “ஆற்றிலே கரைத்த புளி யெனப் போம்” எனவும், இதனை ஆன்றவிந்தடங்கிய சான்றோர் விலக்குதற் கரிய நல்லறமாக அறிவுறுத்துகின்றனர். என்பாராய், “என்று அறிஞர்கள் உரைத்திடல்” எனவும், இதனைக் கைக்கொண்டு ஒழுகாமை குற்றமாம் என்றற்குச் “சிறிதும் போற்றிலேன்” எனவும் எடுத்தோதுகின்றார். ஆற்றிலுள்ள நீர் நில்லாது ஓடுவதால் அந்நீரிற் கரைக்கும் புளிக் குழம்பும் நில்லாது நீங்கும் என்பது நாடறிந்த உண்மை. செய்தற் கெளியதும் உயரிய பயன் தருவதுமாகிய நற்செயல் இறை வழிபாடாகவும் அதனைத் தானும் செய்யாத குற்ற முடையவன் என்பார், “உன்னைப் போற்றிலேன்” என வுரைக்கின்றார். இக் குற்றங்களைப் புரிந்தமைக் குற்ற காரணம் இது வென்பாராய், “சுவையிற் பொருந்திய காரசாரம் சேர் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன்” என்று கூறுகின்றார். தனி நிலையிற் சுவையில்லாத சோற்றுக்குச் சுவை கூட்டிப் பயன் விளைக்கச் செய்வது கார்ப்பு, புளிப்பு, கரிப்பு முதலிய சுவை கலந்த சாறு ஆதலால், “காரசாரம் சேர் சாற்றிலே ஆசை தங்கினேன்” என மொழிகின்றார். சாறு - குழம்பு. காரம் - மிளகு விளைவிக்கும் சுவை. சாரம் - உடற்கு ஆக்கமாகும் பயன். செரிப்பின்கண் காரப் பொருள் கழிவதும், சாரப் பொருள் உடற்கண் தங்குவதும் கண்டு, “காரசாரம் சேர் சாறு” என்கின்றார். நீங்காமை வெளிப்படுத்தற்குத் “தங்கினேன்” என்று சாற்றுகின்றார்.

     இதனால், உணவின் மேல் உளதாகிய பேராசைக் குற்றத்தை எடுத்துரைத்தவாறாம்.

     (2)