3355.

     விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி
          விளைவிலா தூண்எலாம் மறுத்த
     கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக்
          கருத்துவந் துண்ணுதற் கமையேன்
     நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும்
          நீரிடாத் தயிரிலே நெகிழ்ந்த
     பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை
          பற்றினேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவ பெருமானே, உணவுப் பொருள்களின் விளைவில்லாத வற்கடக் காலத்தில் உயரிய உணவின்கண் விருப்பம் இல்லாதவன் போல நடித்தேனே யன்றி, எளிதாகக் கிடைக்கும் கஞ்சி முதலியவைகளை மனமுவந்து உண்ண விழையாத யான், நெருப்பின்கண் பையக் காய்ச்சப்படும் நெய்யிலும், சிறிதும் நீரின்றி உறைந்திறுகிய தயிரிலும் வெந்து குழைந்த பருப்பிலும், நெற்சோற்றுத் திரளையிலும் ஆசை மிக்குற்றேன் காண். எ.று.

     கருப்பு - பஞ்சம். வற்கடம், வறட்சி என வழங்கும் துன்பக் காலம்; இதனைச் சங்கச் சான்றோர், அல்லற் காலம் என்பர். போதிய மழையின்மையால் நிலபுலம் விளைவின்றிக் கெடுதல் தோன்ற, “விளைவிலாது ஊன் மறுத்த கருப்பு” என உரைக்கின்றார். மறுத்தல் -இல்லையாதல். கருப்புக் காலத்தில் மக்கள் பலரும் கிடைப்பது சிறிதாயினும் அதனை யுண்டு அமைவதியல்பாதலின், யானும் உயர்வகைச் சுவை கலந்த உணவில் ஆசையில்லாதவன் போலக் காட்டிக் கொண்டேன் என்பாராய், “விருப்பிலேன் போலக் காட்டினேன்” என விளம்புகின்றார். போதிய விளைவில்லாமையால் மக்கள் பசி மிக்கு இறவாமை கருதி நொய்யும் குறுணையும் கேழ்வரகும் பிறவும் கொண்டு கஞ்சி காய்ச்சி யுண்பராதலின், அக்கஞ்சி யுணவை நான் வேண்டாது ஒழுகினேன் என்பாராய், “கஞ்சியாதிகளைக் கருத்து வந்து உண்ணுதற்கமையேன்” எனக் கூறுகின்றார். அக்காலத்தே தாம் உண்ண விசைந்தது இது வென்பார், “நெய்யும், இறுக வுறைந்த கட்டித் தயிரும், வெந்து குழைந்த பருப்பும், செந்நெற் சோற்றுத் திரளையுமாம்” என்று இயம்புகின்றார். விரும்பும் நெய்யின் நிலைமையை, “நெருப்பிலே யுருக்கும் நெய்” எனவும், உறைந்த தயிரின் கண் நீர் கலந்திருப்பினும் உண்ணும் காலத்து அது வடிக்கப் படல் வேண்டும் என்ற குறிப்புத் தோன்றச் “சிறிதும் நீர் இடாத் தயிர்” எனவும், மாசு மறுவின்றிய துவரையம் பருப்பின் நன்கு வெந்த குழைவைச் சிறப்பித்தற்கு “நெகிழ்ந்த பருப்பு” எனவும், நெற் சோற்றின் அளவு காட்டற்குச் “சோற்றுப் பொருப்பு” எனவும் சொல்லுகின்றார்.

     இதனால், கஞ்சி யுண்டு மெலிவுற்று வருந்துவோர்க் கிடையே நெய்யும் தயிரும் விரவிய நெற் சோறுமுண்ட இரக்கமில் குற்றம் எடுத்துரைத்தவாறாம்.

     (3)