3356.

     உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என்
          றொருவனை உரைப்பதோர் வியப்போ
     குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக்
          கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
     கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக்
          கறியிலே கலந்தபே ராசை
     வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு
          வீங்கிட உண்டனன் எந்தாய்.

உரை:

     சிவபெருமானாகிய எந்தையே, ஆயர் மகளிர் உறியிலே வைத்த தயிர் வெண்ணெய்களைக் கண்ணன் திருடி யுண்டவன் என்று பாகவத நூலோர் வியந்த கூறுவர்; அதில் வியப் பொன்றுமில்லை; மறைவான குறி யிடத்தே வைத்த உண்பொருள்களை யான் திருடிக் கொண்டு போய் உண்டொழித்த யான், பருப்புக் கறியிலும் பொரிக் கறியிலும் கூட்டுக் கறியிலும் உண்டான ஆசை வெறி கொண்டு வயிறு புடைக்க உண்டேனே யன்றி உன்னை நினைத்தேன் அல்லன் காண். எ.று.

     உறி - பனை நார் கொண்டு திரித்துச் சிறுவர்கட்கு எட்டாத உயரத்தில் கட்டிக் கலயங்களை வைத்துத் தொங்க விடுவது. இதன்கண் பால் தயிர் வெண்ணெய் நிறைத்த கலயங்கள் வைக்கப்படும். கண்ணபிரான் சிறுவனாயிருந்த காலத்தில் இந்த உறி வெண்ணெய் தயிர்களைக் களவில் உண்டு மகிழ்ந்தான் எனப் பாகவத புராணம் கூறுகிறது. “சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை, வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு, நாரா ருறியேற்றி நன்கமைய வைத்ததனைப் போரார் வேற்கண் மடவாள் போந்தனையும் பொய் யுறக்கம், ஓராதவன் போல் உறங்கியறிவுற்றுத், தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைந் நீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த, மோரார் குடமுருட்டி முன் கிடந்த தானத்தே ஓரா தவன் போற் கிடந்தான்” (சிறி. மடல்) என்று திருமங்கை மன்னன் உரைப்பது காண்க. இது பற்றியே நம் வடலூர் வள்ளலார், “உறியிலே தயிரைத் திருடி யுண்டன னென்று ஒருவனை யுரைப்பதோர் வியப்போ” எனக் கூறுகின்றார். குறி - பிறர் அறியா வகை யமைந்த மறைவிடம். அருமை குறித்து மறைத்து வைக்கப்பட்ட உண்பொருளை “குறியிலே யமைத்த உணவு” என இசைக்கின்றார். பருப்புக் கறி - கடைந்த பருப்பே மிகப் பெய்து சமைத்த கறி. இதனை வியஞ்சனம் என்பது முண்டு. நெய்யிலே பொரிக்கும் வியஞ்சனம் பொரித்த கறியாகும். இதனைப் பொரிக் கறி என்பர். கடலைப பருப்பும் பிறவும் கலந்து பொரிக்கும் கறி - கூட்டுக் கறியாம். இவற்றின் மணத்திலும் சுவையிலும் தோய்ந்து அறிவு திரியுமிடத்து உண்டாகும் ஆசை மயக்கம் “பேராசை வெறி” எனக் குறிக்கப்படுகிறது. இவ் வெறி யுற்றார் அகப்பட்ட தத்தனையும் எஞ்சாது உண்டு தேக் கெறிவது தோன்ற, “வயிறு வீங்கிட வுண்டனன்” என விளம்புகின்றார்.

     இதனாற் கறி வகையாசை வெறியால் கடவுளை மறந்த குற்றம் தெரிவித்தவாறாம்.

     (4)