3357.

     கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த
          கீரையே விரும்பினேன் வெறுந்தண்
     நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின்
          நீரையே விரும்பினேன் உணவில்
     ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன்
          அய்யகோ அடிச்சிறு நாயேன்
     பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம்
          பிடிக்குமே என்செய்வேன் எந்தாய்.

உரை:

     சிவபிரானாகிய எந்தையே, கீரைக் கறியை விரும்பாத யான், பருப்புக் கலந்த கீரைக் கறியை விரும்பி யுண்பேன்; வெறுந் தண்ணீரைக் குடிக்க மாட்டேனாயினும், தேங்காயின் உள்ளுறும் இளநீரைப் பெரிதும் விரும்பி யருந்துவேன்; உணவுகளைச் சுவை யறிந்து உண்பதில் எனக்கு ஒப்பாவார் யாவர் என்று வீறு பேசுவேன்; கீழான நாய் போன்ற எனது பெயரைச் சொன்னால், ஐயோ, நல்ல தவமனைத்தும் கெட்டொழியும் காண்; இதற்கு நான் யாது செய்வேன். எ.று.

     கீரை - மனைகளில் நோன்பிருப்போரும் காடுகளில் தவம் புரிவோரும் வரைந்துண்ணும் இளந்தளிரும் - இளையுமாகிய உணவு; இதனை இலைக்கறி பைங்கறி என்றும் வழங்குவர்; இலக்கறி பைக்கறி என்று மருவி வழங்குவது முண்டு. பருப்புப் பெய்திட்ட இலைக்கறி சுவை மிக வுடையதாதலால் “பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன்” என வுரைக்கின்றார். யாதொரு கலப்பு மில்லாத தண்ணீர், “வெறுந் தண்ணீர்” எனப்படுகிறது. தெங்கின் இளநீர் இனிய சுவை யுடையதாகலின் அதனை மிக வுண்பேன் என்பாராய், “தெங்கிளங் காயின் நீரையே விரும்பினேன்” என்று மொழிகின்றார். வீறு பேசுதல் - உயர்த்திப் பேசுவது. கீழ்மை மிகுதிபுலப்படுத்தற்கு “அடிச் சிறு நாயேன்” என வுரைக்கின்றார். என் பெயர் என்னுருவைக் காட்டி எனது உணவுப் பண்பை நிலைப்பித்துத் தவ வுணர்வைச் சிதைக்கும் என்பார், “நாயேன் பேரையே யுரைக்கில் தவ மெலாம் ஓட்டம் பிடிக்கும்” எனக் கூறுகின்றார்.

     இதனால் குற்றப் பண்பின் மிகுதி காட்டியவாறாம்.

     (5)