3358. பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே
பத்தியால் ஒருபெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை
தகுபலா மாமுதற் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும்
சூழ்ந்தவர்க் கீந்திடத் துணியேன்
வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
வாய்ப்புளேன் என்செய்வேன் எந்தாய்.
உரை: எந்தையாகிய பெருமானே, பாலிலே பெய்து பிசைந்த சோறு என்று சொன்னால் விரைந்து சென்று ஆர்வமுடன் பெரிய தொரு சால் போன்ற வயிற்றில் திணிப்பதற்குத் தடுத்தலில்லாத யான் தக்க வாழை, பலா, மா முதலிய பழத்தை யுண்ணுமிடத்து அவற்றின் தோலென்றாலும் சிறிதளவேனும் கிள்ளிச் சூழ வுள்ளவர்க்குத் தர நினைக்கமாட்டேன்; எனக்கு வால் இல்லையே யொழிய இருந்தால் வனங்களில் வாழும் தகுதி யுடையேனாதலால் யான் யாது செய்வேன். எ.று.
சோற்றிற் பாலைப் பெய்துண்பது மரபாயினும், பாலின் மிகுதி விரும்பியது தோன்றப் “பாலிலே கலந்த சோறெனில்” எனவும், சோறளிப்பவர் பாலிற் பெய்த சோறு என்பாரேல் என்றற்கு “எனில்” எனவும் இயம்புகின்றார். பக்தி அன்பு; ஈண்டு ஆர்வத்தின் மேல் நின்றது. சால் - அடி பருத்து வாயகன்ற மண்கலம். அதனை நிகர்ப்பது வயிறு என்றற்கு “வயிற்றுச் சால்” எனக் குறிக்கின்றார். இச் சாலை வண்ணார் பெரிதும் கையாளுபவாதலின், வண்ணான் சால்” என்று சிறப்பித்துரைப்பர். வயிறு நிரம்பினும் விடாது ஆசையாற் பெருக வுண்பது காட்ட “வயிற்றுச் சாலிலே அடைக்கத் தடைபடேன்” என வுரைக்கின்றார். இனியவும் உணவுக்கு ஏற்றவுமாதலின், வாழை, பலா, மா ஆகிய மூவகைக் கனிகளை எடுத்துரைக்கின்றார். பழத்தின் மேலுள்ள மிகுதியால் தோலைக் கொடுத்தற்கும் மனம் இசையாமை தோன்றப் “பழத்தின் தோலிலே யெனினும் கிள்ளி ஓர் சிறிதும் சூழ்ந்தவர்க்கீந்திடத் துணியேன்” என்று சொல்லுகின்றார். பழத்தையே பார்த்துண்டற்குரியவர் என்றற்குச் “சூழ்ந்தவர்” எனக் கூறுகின்றார். ஆசையெழுந்து ஈதலை மறுக்கின்றமையின், “துணியேன்” என்கின்றார். மனித வுடம்புடன் நின்றேனாயினும், காடுறையும் குரங்கின் குணமும் செயலும் உடையவன் என்பாராய், “வாலிலேன் இருக்கில் வனத்திலே யிருக்க வாய்ப்புளேன்” எனவும், வேறுபட்ட பண்புடையனாதலால் செய்வதறிகிலேன் என்பாராய், “என் செய்வேன்” எனவும் இயம்புகின்றார்.
இதனால், சோற் றாசையும் செய்வ தறியாமையுமாகிய குற்றமுடைமை தெரிவித்தவாறாம். (6)
|