3359.

     உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த
          உண்டியே உண்டனன் பலகால்
     கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன்
          கட்டிநல் தயிரிலே கலந்த
     தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்
          சம்பழச் சோற்றிலே தடித்தேன்
     திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில்
          செருக்கினேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவ பெருமானே, உடம்பெல்லாம் ஒரேவயிறாகச் சர்க்கரை கலந்த சோற்றையே விரும்பிப் பன்முறையும் உண்பவனாகிய யான், பானையில் வைத்த புளிச்சோற்றை யுண்டு மகிழ்ந்தேன்; நல்ல தயிரைக் கட்டியாகப் பெய்தமைத்த பெரிதாகிய சோற்றை யுண்டு செருக்கினேன்; எலுமிச்சம் பழச் சாறு கொண்டமைத்த சோற்றை யுண்டு உடல் பருத்தேன்; சிறப்புப் பெற்ற வேறு சித்திரான்னங்களை யுண்டு பெருமித முற்றேன்; இப் பெற்றியனாய யான் யாது செய்வேன். எ.று.

     உணவுண்டு நிறைந்த வயிறு கழுத்தளவும் வீங்கித் தோன்றுதல் பற்றி, “உடம்பொரு வயிறாய்” என்றும், நிறைத்த உண்பொருள் சர்க்கரைப் பொங்கல் என்றற்கு, “சர்க்கரை கலந்த உண்டி” என்றும், உடம்பெலாம் வயிறாய்த் தோன்றுதற்குப் பலகால் உண்டமை என்பார், “உண்டனன் பலகால்” என்றும் கூறுகின்றார். புளிச்சோற்றைப் பானையிற் பெய்து வைத்துப் பின்னர் உண்டமை புலப்பட, “கடம் பெறு புளிச் சோறு” எனவும், புளிச்சோறு மயக்கம் தருவதாகலின், “உண்டுளே களித்தேன்” எனவும் உரைக்கின்றார். சிவக்கக் காய்ந்து பாலால் அமைந்து கண்டங் கண்டமாய்த் தோய்ந்த தயிர் கலந்த சோறென்றற்குக் “கட்டி நல்தயிரிலே கலந்த தடம் பெறு சோறு” எனச் சிறப்பிக்கின்றார். பெருமை யுணர்த்தும் தட வென்னும் சொல் தடம் என வந்தது. தயிர்ச் சோறு உண்டார்க்குப் பெருமித வுணர்வைத் தருதலால், “தருக்கினேன்” எனவும், எலுமிச்சச் சாறு கலந்தமைத்த நெற் சோறு உடம்பு தடிக்கச் செய்யும் என்று உண்டு பயின்றோர் உரைத்தலால் “தடித்தே”னெனவும் இயம்புகின்றார். சித்திரான்னம், முந்திரிகைப் பருப்பு. பாதம் பருப்பு, சாரப் பருப்பு, திராட்சை, கற்கண்டு முதலியன கலந்திட்ட பாற் பொங்கல்.

     இதனால் சோற்று வகையில் ஆசை கொண் டுண்ழந்த குற்றம் தெரிவித்தவாறாம்.

     (7)