3360.

     மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில்
          விருப்பெலாம் வைத்தனன் உதவாச்
     சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த
          துவையலே சுவர்க்கம்என் றுண்டேன்
     இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில்
          எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன்
     குளகுணும் விலங்கின் இலக்கறிக் காசை
          கொண்டனன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     சிவ பெருமானாகிய எந்தையே, மேலும் மேலும் மிளகு கலந்து சமைத்த பல்வேறு வகையான உணவை விரும்பி யுண்பவனாகிய யான் சிதைந் தொழிந்த சுளகினும் கீழ்ப்பட்டவனாயினேன்; பருப்பினால் செய்த துவையற் சுவையே துறக்க வுலக போக மெனக் கருதி யுண்பவன்; இரக்கமில்லாத மனத்தையுடையவனாகிய யான் இனிய சுவையுற்ற பச்சடிசில் எவ்வகையதாயினும் விரும்பி யுண்பேன்; பசுந் தழைகளையே மேய்ந்துண்ணும் விலங்குகளைப் போல இலைக் கறிகளையே யுண்டுறைகின்றவனாதலால் ஆசை யறுத்தற்கு யாது செய்வேன். எ.று.

     பச்சை மிளகும் உலர்ந்த மிளகுமாய மிளகு வகைகளைக் கொண்ட காரமுடைய உண்டி வகையை, “மிளகு மேன் மேலும் சேர்த்த பல்லுணவு” எனப் பகர்கின்றார். உதவாச் சுளகு - தேய்ந்து பயன்படாதொழிந்த சுளகு. சுளகு - அடியகன்று நீண்டு தலையகலம் சுருங்கிய முறவகை. யானைக் காது போல்வது முறம். எதற்கும் பயன்படாத சுளகு குப்பையில் எறியப்படுவது போல யானும் கழிக்கப் பட்டேன் என்பாராய், “உதவாச் சுளகினும் கடையேன்” எனக் கூறுகின்றார். பொன்போல வறுத்து அரைக்கப்பட்ட பருப்புத் துவையல் இனிய சுவை யுடையதாகலின், “பருப்பிலே யமைந்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன்” என வுரைக்கின்றார். இளகுதல் - இரக்கத்தாற் குழைதல். பச்சடிசில் - வேகவையாது பசுமையான மல்லி, மிளகு, சீந்தில், மாங்காய் முதலியவற்றைக் கொண்டு தனித்தனியாகச் சுவையுற அமைப்பது. இஃது இந்நாளில் பச்சடி என்ற பெயரால் எங்கும் வழங்குகிறது. மிளகு பச்சடி கேரள நாட்டில் மிக்குளது; சீந்திற் பச்சடி காடு படர்ந்த மலைப் பகுதிகளில் காணப்படும். அளவிற் சுருங்கிச் சுவையில் மிக்குறுதலின், “இனிய பச்சடிசில்” என இசைக்கின்றார். குளகு - பச்சிலை.

     இதனால், துவையலும் பச்சடிசிலுமாகிய உண்டி வகைகளில் ஆசையுற்ற குற்றம் விதந்துரைக்கப்பட்டவாறாம்.

     (8)