3361.

     தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும்
          தவறவிட் டிடுவதற் கமையேன்
     கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக்
          கொட்டினேன் குணமிலாக் கொடியேன்
     வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப
          மலங்கொட்ட ஓடிய புலையேன்
     பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த
          பாவியேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவபிரானே கிழங்கு, தண்டு, காய், பூ முதலிய வகைகளில் யாதும் மறந்தும் விட்டொழித்தற்கு உடன்படாதவனாகிய யான், சமைத்தவற்றை வாயிற் பெய்து குழி போன்ற வயிற்றிற் கொட்டி நிறைத்தேன்; நற்குண மில்லாத கொடியவனாகலின் வண்டுகளைப் போல விரைந்து சென்று வயற்புறங்களில் உண்டு கழித்த மலத்தைக் கழித் தொழித்தற்கு ஓடிய புலைத்தன்மை யுடையவனாவேன்; அதனோடமையாது, முன்பு போல் பசி வேட்கை மிக்கு உணவும் வரும் திறத்தை எதிர்பார்ப்பேன்; இத்தகைய பாவியாகிய நான் வேறே யாது செய்வேன். எ.று.

     தண்டு - வாழைத் தண்டு, கீரைத் தண்டு போல்வன கிழங்கு, வள்ளி முள்ளங்கி போல்வன. காய் - வாழை, பாகல் போல்வன; பூ - வாழை கத்தரி போல்வன. தவற விடல் -வேண்டா வென விலக்குதல். வயிறாரவுண்டேன் என்பார், “கொண்டு போய் வயிற்றுக் குழி யெல்லாம் நிரம்பக் கொட்டினேன்” என இழித்தல் வாய்ப்பாட்டில் இயம்புகின்றார். நிரம்புதல் - நிறைதல். நிரம்ப - ரொம்ப எனப் பேச்சு வழக்கில் வரும். வண்டு - பூவிற்றேனுண்பனவும், சாணம் மலம் ஆகியவற்றை மொய்த் துண்பனவுமாம். காலை மாலைகளிற் வயற் புறம் சென்று மலம் கழிக்கும் இயல்பு பற்றி, “மலம் கொட்ட ஓடிய புலையேன்” எனப் புகல்கின்றார். மலத்தின் எருவாம் தன்மை யுணரப்பட்ட பின் திறந்த வெளியில் மலம் கழித்தல் தீது என்று அறிஞர் அறிவுறுத்துகின்றனர். காலந் தோறும் பசித் தீ எழுந்து வெதுப்புதல் பற்றி, “பண்டு போற் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன்” எனப் பகர்கின்றார். ஊணொன்றே எதிர்பார்த்திருக்கும் செயலால், “பாவியேன்” என வுரைக்கின்றார்.

     இதனால், உண்டலும் மலம் கழித்தலுமே செயலாவது நினைந்து கூறியவாறாம்.

     (9)