3362.

     வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி
          வைத்தலே துவட்டலில் சுவைகள்
     உறுத்தலே முதலா உற்றபல் உணவை
          ஒருமல வயிற்றுப்பை உள்ளே
     துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன்
          துணிந்தரைக் கணத்தும்வன் பசியைப்
     பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப்
          பொறுத்தனன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவனே, வறுத்தலும் பொடி செய்தலும் மலர்த்தலும் புரட்டுதலும் துவட்டலும் வேறு கலவைகளாற் சுவை மிகுவித்தலாகிய சமையற் செய்கையால் உளவாகிய உணவுகளை மல நிறைந்த ஒரு வயிற்றுப் பைக்குள் நிறைப்பதே என்னுடைய தொழிலாம் எனத் தெளிந் துள்ளேனாதலால், அத் தெளிவால் அரைக் கணமும் கொடிய பசி நோயைப் பொறுக்க மாட்டாதவனாய் புலால் நாறும் மலக்கூடாகிய உடம்பைச் சுமப்ப தொழிய வேறு என்ன செய்வேன். எ.று.

     கிழங்கு காய்களாகிய சிலவற்றை வறுத்துப் பொடி செய்தல் சமையற் செய்கைகளில் ஒன்றாதலின், “வறுத்தலே பொடித்து மலர்த்தலே” எனக் கூறுகின்றார். பொடித்து மலர்த்தல் என்பதைப் பொடித்தல் மலர்த்தல் என விரித்துக் கொள்க. வற்றலாய்ச் சுருண்டுள்ளவை, வேக வைக்குமிடத்து, விரிந்து மலர்தலின், அதனை மலர்த்தல் என்று கூறுகின்றார். சிறு வெப்பத்தில் சமைக்கப்படுபவை, “புரட்டல்” எனப்படும். இன்னோரன்ன செய்கைகள் சமைக்கப்படும் காய்கறிகட்குச் சுவை மிகுவித்தலால், “சுவைகள் உறுத்தல் முதலா வுற்ற பல்லுணவு” என வுரைக்கின்றார். வேண்டாவிடினும் மென்று வயிற்றுக்குட் செலுத்துவது பற்றி, “வயிற்றுப் பை யுள்ளே துறுத்த” லென்கின்றார். உண்பதே உயிர் வாழ்வார் நாளும் வேளை தோறும் செய்தொழிலாதலால், “வயிற்றுப் பை யுள்ளே துறுத்தலே எனக்குத் தொழிலெனத் துணிந்தேன்” என்று சொல்லுகிறார். செரிப்புற்றுக் கழிந்த பொருள் வயிற்றினுள் மலமாய் ஒடுங்குதல் நோக்கி, வயிற்றை “மல வயிற்றுப் பை” எனப் பழிக்கின்றார். துணிதல் - தெளிதல். தெளிந்த நீரைத் துணி நீர் என்பது சான்றோர் மரபு. பசி நோய், பொறுத்தற் கரிய வலிமை படைத்த தென்பதால், “வன்பசி” என்று குறிக்கின்றார். உள்ளே மலமும் ஊனாகிய புலாலும் நிறைந்துள்ளமையால் உடம்பை, “மலப் புலைக் கூடு” என மொழிகின்றார். “புழுமலி நோய்ப் புன்குரம்பை” எனச் சான்றோர் கூறுவதுண்டு.

     இதனாற் பலவகை சுவை யுணவை யுண்டு உடம்பைப் பேணும் திறம் உரைத்தவாறாம்.

     (10)