3363.

     பருப்பிடி யரிவா லிடிகளா திகளால்
          பண்ணிய பண்ணிகா ரங்கள்
     உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம்
          ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன்
     கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய
          கடையரில் கடையனேன் உதவாத்
     துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து
          தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவனே, பருப்புமாவும் அரிசியின் வெண்மையான மாவும் பிற மாவுகளும் கொண்டு செய்த பண்ணியங்கள் ஒவ்வோர் உருப்பிடியாக வந்து கொண்டிருக்க அவை யெல்லாவற்றையும் எனது ஒரு பெரிய வயிறு அடைய உண்டொழித்த யான், பிறப்புக்கேதுவாகிய இவ்வுலகின்கண் பிடியளவாய சாம்பராகும் கீழ் மக்களிற் கீழானவன்; பயனில்லாத துருப் பிடித்த இருப்புத் துண்டு போற் கிடந்து உறங்கிக் கெட்டேனாகலின், யான் யாது செய்வேன். எறு.

     இடி, இடித்த மா, உழுந்து, துவரை, கடலை யாகியவற்றின் மா, “பருப்பிடி” எனவும், நெல் லரிசியை இடித்துப் பெற்ற மா “அரிவால் இடி” எனவும் கூறப்படுகின்றன. புத்தரிசி, புத்தரி என வழங்குத லுண்மையின் அரிசி மா, “அரி யிடி” என்றும், அது மிகவும் வெண்மையா யிருப்பதால் “அரிவால் இடி” என்றும் வந்தன, இந்த மா வகைகளைக் கொண்டு பண்ணிய வகை பலவும் செய்யப்படுவதால், “பருப்பிடி அரிவால் இடிகளாதியாற் பண்ணிய பண்ணிகாரங்கள்” எனக் கூறுகின்றார். பண்ணிகாரம் நூல்களிற் பண்ணியம் என வழங்கும்; இந்நாளில் பலகாரம் எனச் சொல்லுகின்றனர். “பண்ணிய மேந்தும் கரம் தனக்காக்கி” (தனிபு) எனக் கச்சியப்ப முனிவர் குறிப்பது காண்க. “சிறந்ததேஎத்துப் பண்ணியம் பகர்நர்” (மதுரைக்) என்றனர் சங்கச் சான்றோர். பண்ணிய வகை ஒவ்வொன்றும் உருப்பிடியாகும். இஃது உருப்படி என மருவியுளது. கரு - பிறப்பு. பிறப்புக் கேதுவாகிய விளை நிகழ்ச்சிக் கிடமாகலின், மண்ணுலக வாழ்வைக் “கருப்பிடி யுலகு” என மொழிகின்றார். எரு - சாம்பர். பிடி யளவாகும் சாம்பலை, “எருப்பிடி” என்று கூறுகிறார். இழிக்கப்படுவது பற்றி, “எருப்பிடி யனைய கடையரில் கடையேன்” என வுரைக்கின்றார். துருப் பிடித்த இரும்புத் துண்டு வலியிழந்து பயன்படா தொழிவதால் “துருப்பிடி யிருப்புத் துண்டு போற் கிடந்து தூங்கினேன்” எனச் சொல்லுகின்றார்.

     இதனாற் பண்ணிய ஆசை மேலிட்ட குற்றத்தாற் கெட்டமை கூறியவாறாம்.

     (11)