3364.

     அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள்
          அடுக்கிய இடந்தோறும் அலைந்தே
     தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத்
          தவம்புரிந் தான்என நடித்தேன்
     பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப்
          பொங்கினேன் அய்யகோ எனது
     முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில்
          மூடனேன் என்செய்வேன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவனே, நுண்ணிய வுருவுடைய சிற்றுண்டி வகைகள் ஆசைப்பட்டு அவைகள் அடுக்கி யிருக்கும் கடைதோறும் அடிக்கடி சென்றலைந்த யான், ஊன் துண்டைக் கடித்துச் சுவைக்கும் நாய் போல் உண்டு நாவால் வாய் சுவைத்துத் தவம் புரிபவனைப் போல வாயை மென்று நடித்தேன்; அவற்றின் பொடியிற் படிந்த மணத்தை மூக்குத் துளைகளால் மோந்து உவகை யுற்றேனே யன்றி, ஐயோ, எனது தலையில் நினது திருவடியைப் புனைந்து கோடற்கு நல்லறி வில்லாத மூடனாதலால் முயன்றேனில்லை; ஆகவே யான் யாது செய்வேன். எ.று.

     நுண்மை - நுண்ணிய வுருவமைந்த சிற்றுண்டி வகைகள், அவை சிற்றுண்டிக் கடைகளில் தனித் தனியாகத் தட்டுக்களில் வரிசையாகப் பலரும் கண்டு வாங்கி யுண்ண வைக்கப்பட்டிருப்பது மரபாதலின், “அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்து” என்கின்றார். தடி - ஊன் துண்டு; ஊன் ஒட்டியிருக்கும் எலும்புத்துண்டுமாம். நாவால் வாயிதழ்களை நக்கிக்கொள்ளும் செயலை, “நுகர்ந்து வாய் சுவைத்து” என்றும், தவம் புரிவோன் மந்திர மனைத்தால் வாயிதழ் புலர்தலின் நாவால் துடைத்துக் கொள்வது போல் வாய் சுவைத்தமை விளக்குதற்குத் “தவம் புரிந்தானென நடித்தேன்” என வுரைக்கின்றார். பொடி - சிற்றுண்டியிற் சிதறும் துகள். கடி - நல்ல மனம். சிற்றுண்டித் துகளின் மணத்தை மோந்து இன்புற்றமை தோன்ற, “நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன்” என்று கூறுகின்றார். இறைவன் திருவடி தமது முடி மேல் பொருந்த விழைவது சிவநெறிச் சான்றோர் இயல்பாக, யான் அது செய்திலேன் என வருந்துகின்றமையின், “எனது முடிக்கடி புனைய முயன்றிலேன்” எனக் கவல்கின்றார்.

     இதனால், சிற்றுண்டி விழைவுற் றலைந்தமை தெரிவித்தவாறாம்.

     (12)