3365.

     உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை
          உடையவா அடியனேன் உனையே
     அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்
          அப்பநின் ஆணைநின் தனக்கே
     தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன்
          தூயனே துணைநினை அல்லால்
     கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண்
          கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவபெருமானே, உண்பொருளையே பெரிதும் அவாவினே னென்றாலும் என்னை யுடைய முதல்வனாகிய உன்னையே அணுகியிருந்தேன்; இன்றும் இருக்கின்றேன்; இனியும் இருப்பேன்; இது அப்பனாகிய நின் மேல் ஆணை; நின்னுடைய திருவடிகட்குத் தொண்டு புரியாதவர்கள் கை நீட்டித் தரும் சோற்றினை யான் விரும்புவதில்லை; தூயவனே, எனக்குத் துணை யாவார் நின்னைத் தவிர வேறே காணேனாதலால் என்னைக் காப்பது உனக்குக் கடன்; என்னைக் கைவிடாதே. எ.று.

     உண்டி - உணவு; உண்பொருளுமாம். உண்பொருள் மேலும் உண்டலின் மேலும் உள்ள ஆசை மிகுதியைப் பல படியாக எடுத்தோதினமையால், “உண்டியே விழைந்தே னெனினும்” என்றும், என்றாலும் எனது உள்ளம் உனது திருவடியையே நினைந்து தோய்ந்திருந்தது என்பாராய், “அடியனேன் உனையே அண்டியே யிருந்தேன்” என்றும், இருந்தமைக்குக் காரணம் நீயே என் உடல் பொருள், உயிர் அனைத்துக்கும் முதல்வன் எனக்குறித்தற்கு “என்றன்னை யுடையவா” என்றும் இயம்புகின்றார். சோற்றாசை மிக்கவனாயினும், மெய்த் தொண்டரிடத்தல்லது பிறர்பாற் சென்று உண்ணுவதில்லை. என்ற கருத்தை யாப்புறுத்தற்கு, “நினக்குத் தொண்டுறாதவர் கைச் சோற்றினை விரும்பேன்” எனக் கட்டுரைக்கின்றார். அண்டுதல் - அணுகுதல்; அணைதல் - நெருங்குதல். அண்ணுதல் அண்முதல் என வரும் வாய்பாடுகளில் ஒன்று. முக்காலத்தும் தமது கொள்கை யிதுவென வற்புறுத்தற்கு “இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை” என வுரைக்கின்றார். முதல்வனாகிய உன்னை யொழிய வேறு துணையிலேனாதலால் என்னைக் காப்பது உனக்குக் கடன் எனப் புகலடைகின்றாராகலின், “காப்பது உன் கடன்” என முறையிடுகின்றார்.

     இதனால், உண்டியாசை மிக்கோனாயினும் திருவருளாசை யில்லாதவனல்லன் எனத் தெரிவித்தவாறாம்.

     (13)