3368.

     பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி
          எடுத்துரையில் புனைவேன் சில்லோர்
     தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி
          ஓடுவனித் தரத்தேன் இங்கே
     முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின்
          அருள்இலதேல் முன்னே வைத்த
     அடிஎடுக்க முடியாதே அந்தோஇச்
          சிறியேனால் ஆவ தென்னே.

உரை:

     திருநீற்றுப் பொடியை எடுத்தணியச் சென்று இடையில் அதனை மறந்து பின் வெறும் மடியைத் தட்டிப் பார்த்து இல்லாமைக்கிரங்கி அரையிற் கட்டிக் கொள்ளும் கடையனாகிய யான் யாதானும் காரணம் பற்றிச் சிலர் கையில் தடி யெடுத்து ஏத்துவராயிற் கண்டு அதற்கு அச்சத்தால் மனம் கலங்கி வேறிடம் நாடி விரைந்தோடுவோன்; இத்தகைய கீழ்த் தரமுடைய யான் இவ்வுலகில் நினது திருவருட்டுணை யில்லையாயின் தலை நிமிர வல்லவனாவேனோ? முன் வைத்த காலைத் தான் எடுக்க வல்லவனாவேனோ? ஐயோ, சிறியவனாகிய என்னால் யாது செய்ய முடியும்? எ.று.

     கொண்ட குறிப்பைச் சாதித்துக் கொள்ளும் மன வன்மையும் வினையாண்மையும் உடையவனல்ல னெனத் தமது மென்மை யியல்பையுணர்த்தற்குப் “பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையிற் புனைவேன்” என்று புகல்கின்றார். பொடி - திருநீற்று வெண் பொடி. மடி - அரையிற் உடுத்த ஆடையின் மடித்த கூறு. தம் பாட்டுக்குச் செல்லும் சிலர் கையில் தடி யேந்துவது கண்டால் தம்மை யடிப்பரென அஞ்சி ஒதுக்கிடம் நாடி யோடும் கீழ்மைப் பண்புடையவன் என்றற்கு “உளம் கலங்கி யோடுவேன்” என வுரைக்கின்றார். தரம் - குணம் செயல்களால் தலை இடை கடை எனக் காணப்படும் தகுதி. இத் தரத்தேன் - இத்தகைய கடையாகிய கீழ்மைத் தகுதி படைத்த நான். நினது திருவருட் டுணை யில்லையாயின் ஒன்றும் செய்ய வல்லவனாகேன் என்பாராய், “இங்கே முடியெடுக்க வல்லேனோ” என்று கூறுகிறார். முடியெடுத்தல் - குனிந்த தலையை நிமிர்த்தல். “நின் அருள் இலதேல்” என்பது முன்னும் கூட்டுக. அது போல் முன்னே எடுத்து வைத்த காலை நின் திருவரு ளில்லையாயின் மேலும் எடுத்து வையேன் என்பாராய், “இறைவா நின் அருளிலதேல் முன்னே வைத்த அடி யெடுக்க முடியாதே” என்று மொழிகின்றார். சிறியேன் - குணம் அறிவு செயல்களிற் சிறுமையுடையவன்.

     இதனால் திருவருளின்றி ஒரு செயலும் செய்ய மாட்டாமை தெரிவித்தவாறாம்.

     (3)