3369.

     பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால்
          பணிகின்றேன் பதியே நின்னைக்
     கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால்
          குழைகின்றேன் குறித்த ஊணை
     ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால்
          உறங்குகின்றேன் உறங்கா தென்றும்
     ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச்
          சிறியேனால் ஆவ தென்னே.

உரை:

     சிவபரம்பொருளே, நினது திருவருள் என்னைப் பாடச் செய்தலாற் பாடுகின்றேன்; பணியச் செய்தலாற் பணிகின்றேன்; நின் திருவடி நினைவிற் சேர்த்தலால் யான் அதனைக் கூடுகின்றேன்; மனம் உருகச் செய்தலால் உருகுகின்றேன்; குறித்த உணவை உண்பித்தால் உண்கின்றேன்; உறங்கச் செய்தலால் உறங்குகின்றேன்; உறங்காமல் உலக வாழ்வில் ஆடச் செய்தலால் ஆடுகின்றேன்; ஐயோ, சிறியவனாகிய என்னால் தனிநிலையில் ஆவக் கூடியது ஒன்றுமில்லை; எ.று.

     சிவ சத்தியாகிய திருவருளால் உலகப் பொருள் யாவையும் என்னுடைய உடல் கருவி கரணங்கள் அனைத்தும் இயங்குகின்றன என்பாராய், “பாட்டுவித்தலாற் பாடுகின்றேன், பணிகின்றேன், நின்னைக் கூடுகின்றேன்; நினைந்து குழைகின்றேன்; உண்கின்றேன்; உறங்குகின்றேன்; உறங்காது ஆடுகின்றேன்; சிறியவனாகிய என்னால் ஆவது பிறிதில்லை” என அறிவிக்கின்றார். பாடுவித்தல் - பாட்டுவித்தல் என வந்தது. பதி - சிவ பரம் பொருள். உயிர்களையும் உலகியலையும் கூட்டி வாழ்விக்கும் தலைவனாதல் தோன்ற, “பதியே” எனப் பராவுகின்றார். கூடுதல் - ஈண்டுத் திருவருளைச் சிந்தித்தல். குழைதல் - அன்பால் உருகுதல். நுகர்தற்கெனத் திருவருள் காட்டும் உணவு, “குறித்த வூண்” எனப்படுகிறது. உறக்குதல் - ஓய்வு பெறுவித்தல். ஆடுதல் - ஈண்டு வாழ்தல் மேற்று. இவ்வாறே திருவருள் ஞானம் கைவரப் பெற்றதனால் திருநாவுக்கரசர், “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே, அடக்குவித்தா லாரொருவர் அடங்காதாரே, ஓட்டுவித்தா லாரொருவ ரோடாதாரே, உருகுவித்தாலாரொருவர் உருகாதாரே, பாட்டுவித்தா லாரொருவர் பாடாதாரே, பணிவித்தா லாரொருவர் பணியாதாரே, காட்டுவித்தா லாரொருவர் காணாதாரே, காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” (தனித்) எனத் தெரிவித தருளுவது காண்க.

     இதனால், திருவருளின்றித் தன்னால் ஒன்றும் செய்ய மாட்டாத சிறுமை புலப்படுத்தவாறாம்.

     (4)