3374. கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய்
குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருஉளமே
துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என்
உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
உரை: எல்லாம் உடைய பெருமானே, எனக்கு உறவே, எனது உயிரே, என்னுடைய அருளரசே, எனக்கு அன்னையும் அப்பனுமான ஐயனே, பிறவிக் கடலினின்றும் யான் கரை சேர அருளினாலும், கடையவனாகிய யான் செய்த குற்ற மெல்லாம் எண்ணி மாயையாகிய திரை மூடிய உலகியலிற் புதையுண்டொழியச் செய்தாலும் யாவும் நின் திருவுள்ளத் தடைவே என எண்ணிக் கொண்டு பேச்சொடுங்கி இருப்பதல்லது சிறியவனாகிய என்னால் யாது செய்ய இயலும். எ.று.
உலகும் உலகியற் பொருளும் யாவும் படைத்தளித்துத் தனக்கேயுடைமையாகக் கொண்டவனாதலால் இறைவனை உடையான் என்று சான்றோர் புகல்வது மரபாதலின், “உடையாய்” என வுரைக்கின்றார். அறிவில் அருளால் மன்னியுதவுதலால் “உறவு” என்றும், உண்மை காட்டி யூக்குதலின் “உயிர்” என்றும், அருணெறிக்கண் செலுத்தியுய்வித்தலின் ”அரசே” என்றும், இனிது வாழ்வித்தலால் “அம்மே அப்பா” என்றும் ஏத்துகின்றார். தனக்கென விருப்பின்றி எல்லாம் இறையருள் எனத் தான் அமைந்திருக்குமாறு புலப்பட, “கரை சேரப் புரிந்தாலும்” எனவும், செய்த குற்றங்களைத் தாமே யெண்ணித் தம்மை நொந்து கொள்ளுமாறு விளங்கக் “கடையேன் செய்குற்றமெலாம் கருதி மாயைத் திரை சேரப் புரிந்தாலும்” எனவும் உரைக்கின்றார். கரை - இறைவன் திருவடி நீழல். கரை என்ற குறிப்புருவகம், பிறவிக் கடலை எய்துவிக்கின்றது. திருவருள் ஞானம் வழங்கித் திருவடி நீழற் பேரின்பம் பெற உதவுதல் இறையருளாதல் பற்றிக் “கரை சேரப் புரிதலை” விதந்து விளம்புகின்றது. குற்றங்களைக் காண்டலால் தம்மைக் “கடையேன்” என்கின்றார். உலகியல் மயக்கம், “மாயைத் திரை” என்றும், அதற்கமைந்த அறிவு செயல்களில் ஆழ்ந்து படுவதை, “மாயைத் திரை சேரப் புரிதல்” என்றும் இயம்புகின்றார். செய்யப்படும் குற்றங்கள் பிறவிக் கேதுவாகலின், “குற்றமெலாம் கருதி மாயைத் திரை சேரப் புரிந்தாலும்” என ஓதுகின்றார். பிறவிக்குள் ஆழ்த்தலும் பிறவாப் பெருநிலைக்கண் இருத்தலும் திருவருட் செயலாதலால், “திருவுளமே துணையென நான் சிந்தித்து இருத்தலன்றிச் சிறியேனால் ஆவதென்” என இசைக்கின்றார். இதனைத் தன்பணி நீத்தல் எனச் சாத்திரங்கள் குறிக்கின்றன.
இதனால், தன்பணி நீத்து இறையருள் என இருத்தலைத் தெரிவித்தவாறாம். (9)
|