3375. இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே
வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன்
நின்னருளே துணைஎன் றந்தோ
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி
எல்லாங்கண் டிருக்கும் என்றன்
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச்
சிறியேனால் ஆவ தென்னே.
உரை: உலகியல் எல்லாவற்றையும் கண்டு கொண்டிருக்கின்ற என் அன்புருவே, எனக்கு அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, இன்பமே பெரிதும் நுகரும் திருவருள் வாழ்வில் என்னை இருந்தருளப் பண்ணினாலும், இவ்வுலகின்கண் துன்பச் சூழலிலே கிடந்து வருந்தச் செய்தாலும் யான் மறுத் தொதுக்க வல்லனவல்ல; நின் திருவருளொன்று தான் எனக்குத் துணையாவது என நினைந்தே என் ஏழை நெஞ்சம் எய்திய நிலைக்குள் ஒடுங்கி யிருப்பதன்றி வேறே என்னாற் செய்யலாவது யாதும் இல்லை, காண். எ.று.
பல்வகைப் பொருளும், பல்வகைச் செயலும், பல்வேறு, நிலைகளிலிருந்து பலவேறு நெறிகளில் இயலுகின்றனவாயினும் எல்லாவற்றையும் எஞ்சாமற் கண்டு கொண்டிருப்பது பரம்பொருளின் பண்பாதல் பற்றி, “எல்லாம் கண்டிருக்கும் என் அன்பே” என இயம்புகின்றார். நிகழ்ச்சிகளில் இன்பம் கண்டு மகிழ்தலும் துன்பம் கண்டு வெறுத்தலு மின்றி ஒப்ப நின்று காண்பது புலப்பட, “என்றன் அன்பே” என்று உரைக்கின்றார். திருவருள் இயற்கையாவது, ஒவ்வொருவரும் எண்ணுவன பேசுவன செய்வன யாவும் திருவருள் இயக்க மெனக் கண்டுணர்ந்து அவ்வுணர்வு நல்கும் இன்பத்தில் தோய்ந்திருத்தலாகும். அந்நிலைதானும் திருவருளால் அமைவது தோன்ற, “இன்பே நன்று அருளி அருள் இயற்கையிலே வைத்தாலும்” எனக் கூறுகின்றார். நன்று - மிகுதி. துன்பு செய்வித்தல், துன்பத்திலே கிடந்து வருந்தச் செய்தல். இன்பம் துன்பம் என உலகியல் விளைவு இரண்டேயாதலின், இன்ப வருள் இயற்கைக்கு மாறாயதைத் “துன்பு” எனச் சுட்டி மொழிகின்றார். துன்பம், துன்பு என வந்தது. எல்லாம் திருவருளின் இயக்கம் எனக் கொள்ளுமிடத்து மனத்தின் செயல் முனைப்பற்று அடங்கி யொடுங்குதலால் “என் பேதை மனம் அடங்கியிருப்பதன்றி ஆவது என்னே” என அறிவிக்கின்றார் திருவருளையின்றித் தனக்கென ஒரு தனியுரிமையும் தனிச் செயலும் இல்லாமை பற்றித் தன்னை “சிறியேன்” என்று குறிக்கின்றார்.
இதனால், தற்சுதந்தரம் இன்றிய உண்மை ஞானநிலை விளக்கியவாறாம். (10)
|