11. அத்துவிதானந்த அனுபவ இடையீடு
அஃதாவது, ஆன்மா சிவத்தோடு கூடிப் பெறும் அத்துவிதச் சம்பந்தத்தால் எய்தும் இன்பத்திற்கு இடையீடாக வந்து தடை செய்வனவற்றை விளக்குவதாம்.
சிவத்தோடு ஆன்மா பெறும் சம்பந்தத்தை அத்துவிதச் சம்பந்தம் என்பர். ஆன்மா தூய்மையால் சிவத்தோடு ஒருதன்மைத்தாகிப் பொருட்டன்மையால் அதனின் வேறுபட்டு இரண்டாய்க் கூடியிருப்பது சைவ நெறியில் “சுத்தாத்விதம்” என்று சொல்லப்படும். இதனைத் தமிழ் நூல்கள் “ஒன்றி யுடனாதல்” என்று கூறுகின்றன. தூய சிவமாந் தன்மை யெய்திய ஆன்மா, சிவப் பேரொளியில் சிவத்தோடு உடனிருந்து நுகரும் சிவபோகம், அத்துவிதானந்தம் என்பதாம். எல்லா ஆன்மாக்களும் இந்த அத்துவிதானந்தமான சிவபோகத்தை நுகர்தற்குரியனவாம். ஆயினும், மல சம்பந்தத்தால் மாயை கன்மம் என்ற இருவகைத் தொடக்குகளால் பல்வகை இடையூறுகளுக்கு ஆளாகி இடையீடு படுகின்றன. இந்த இடையீட்டினை விளக்குதல் இத் தலைப்பின் பொருளாகும்.
இதன்கண், சிவானந்தத்தின் விளைவு அறியாமையும், திருவருள் வெளியனுபவமும், தத்துவம் கடந்து பெறும் சிவபோக நிலையும், சிவ போக சித்தி பெறும் திறமும், சிவபோகத்தைப் பெற்று நுகரும் திறமும், சிவபோக நுகர்ச்சி முயற்சிக்கு இடையீடாகும் பொருள்களும் பிறவும் கூறப்படுகின்றன.
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம் 3376. திருத்தகுபொன் அம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்திடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கி்அகம் புறங்காணா தெங்குநிறைந் திடுமோ
அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.
உரை: அருட் டிருவிளங்குகின்ற தில்லைப் பொன்னம்பலத்தின்கண் திருக்கூத்தாடி யருளுகின்ற சிவபிரான் திருவடிகள் சிறுமையாற் கீழவனாகிய என் தலை மேல் வந்து பொருந்துமோ? குறிஞ்சி முல்லை முதலாக வுருக் கொண்ட நால்வகைக் கூறு நிலத்தின்கண் நெடிது படரும் மாயா மல முதலாய தொடர்பு நீங்கச் சிவஞானத் திருமேனியைப் பெறுவேனோ? சிவமும் சீவனும் ஒன்று எனவும் இரண்டென்றும் கூறவொண்ணாதவாறு பொருந்துகின்ற சுத்த சிவானந்தமாகிய வெள்ளம் மிக்குப் பொங்கி அகம் புறம் என்பதின்றி எங்கும் நிறையுமோ? நுகரத் தக்க அவ் வெள்ளத்தின்கண் மூழ்கி நான் என்பது கெட்டு அதுவதுவாய் இயைவேனோ? மேல் விளைவது இன்ன தென அறிகிலேன். எ.று.
பொன்னம்பலம் திருவருட் செல்வத்தால் உயர்ந்தோங்கும் பேரிடமாதலால், “திருத்தகு பொன்னம்பலம்” என்றும், அதன்கண் சிவனது ஞானத் திருக்கூத்து நிகழ்வது பற்றி, “திருநடம்செய் திருவடிகள்” என்றும் கூறுகின்றார். சிவனது உயர்வு நோக்குமிடத்துச் சிற்றறிவும் சிறு தொழிலு முடைய ஆன்மாவாகிய தமது சிறுமை இறப்பவும் சிறுகிக் காணப்படுவது புலப்பட, “அடிச் சிறியேன்” என்று சொல்லி, இறைவனது பெறலரும் பெருமை சான்ற திருவடி தனது தலை மேற் பொருந்தித் தீண்டுமோ என ஏங்குவது விளங்க, “திருவடிகள் அடிச் சிறியேன் சென்னிமிசை வருமோ?” என்று எண்ணுகின்றார். திருவடிப் பேறு சிவ ஞான விளக்கம் பெறுதற்கு வாயிலாதலின், அதனை முதற்கண் நினைக்கின்றார். தமிழகத்திற் பாலை நிலம் கற்பனை யுலகிலன்றி உண்மை யுலகில் இல்லாமையால், “உருத்தகு நானிலம்” என்று சான்றோர் கண்டனர். நானிலம், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பனவாம். “நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே” என்பது தொல்காப்பியம். இனி யுருத்தகு நானிலம் என்றற்கு மக்களுருக் கொண்டு வாழ்ந்துலவும் நிலவுலகு என்றலுமுண்டு. மலத்தடை - மலம் கன்மம் மாயை என்ற மூவகைத் தடை; அத்தடை நீக்கத்துக் கென்றே உலகில் உருவுடைய யுடம்பு கொண்டிருக்கின்றோம் என அறிக. சிவஞானத்தால் மண்ணக வினைப் போக மக்களுடம்பு நீங்கிச் சிவபோகத்துக்குரிய ஞானத் திருவுடம்பு எய்த விழைவது புலப்பட, “மலத்தடை போய் ஞானவுருப்படிவம் அடைவேனோ” என வுரைக்கின்றார். ஆன்மாவும் சிவமும் சித்துப் பொருளாதலின் ஒன்றென்பது, சிறுமையும் பெருமையுமாகிய பண்பு வேறுபாடுடையவாதலால் ஒன்றல்ல விரண்டு என்பதும் உண்மையின் “ஒன்றிரண்டு என்னாத” என்றும், ஞான வுருக் கொண்டு சிவமாய்ப் பொருந்தி ஆங்கே பெறலாகும் சிவபோகத்தில் மூழ்கி வற்றாப் பேரின்பம் நுகரும் திறத்தை, “பொருத்தமுறு சிவானந்த வெள்ளம் ததும்பிப் பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ” என்றும் இயம்புகின்றார். மூழ்கி அருந்தத் தகும் வெள்ளம், அருத்தகும் வெள்ளம் என வந்தது; அரும் தகும் வெள்ளம், அருத்தகும் வெள்ளம் என்ற ஆயிற்றென்பதும் உண்டு. பெறற் கருமையும் உண்டற்குத் தக்கமையும் உடையதென்பது கருத்து. ஞானத் திருமேனி முற்றும் அணுப் புதைக்கவும் இடமின்றி நிறைதல் விளங்க, “அகம் புறம் காணாது எங்கும்” என வுரைக்கின்றார். சிவபோகத்தில் மூழ்கி நுகர்வோர், சீவனாகிய நான் என்பது கெட்டுச் சிவமாந் தன்மை பெறுதலின், “நான் போய் அதுவாகப் பெறுவேனோ” என மொழிகின்றார். சிவபோகத்தைக் கண்டார் விண்டதும், விண்டார் கண்டதும் இல்லையாதலால், “அறிந்திலன் மேல் விளைவு” என விளம்புகின்றார்.
இதனால், சிவானந்தத்தில் மேல் விளைவு அறியேன் எனத் தெரிவித்தவாறாம். (11)
|