3377.

     கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
          கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
     அரணமெலாம் கடந்ததிரு அருள்வெளிநேர் படுமோ
          அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
     மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகிநிறைதல்
          வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
     சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
          தனதுதிரு உளம்எதுவோ சற்றுமறித் திலனே.

உரை:

     அகமும் புறமுமாகிய கரணங்கள் பலவும் கரைந் தொழியுமாயின் எஞ்சி நிற்கும் ஆன்மாவின் தனியுருவைக் காண்பது உளதாகுமோ? அங்ஙனம் ஆன்ம வுருவைக் காணுமிடத்து, தனி ஆன்மப் பொருளாகிய என்னைத் தெளியக் காண்டல் கூடுமோ? மலத்தடை முதலிய காவ லெல்லாம் அகன்ற நிலையில் விளங்கும் திருவருட் பெருவெளி காணப்படுமோ? அந்த அருள் வெளியில் நுகர்தற் கமைந்த இன்பானுபவம் எய்துமோ? உடல்களின் இறப்புக்களை நீங்கிச் சிவமாய் நிறைவது எனக்குக் கைகூடுமோ? ஆங்கும் அனாதி மல வாதனை தாக்குமோ? திருவடியிரண்டையும் காட்டித் தரும் பொருட்டு ஞான சபையில் திருக்கூத்தியற்றும் சிவபெருமானுடைய திருவுளக் குறிப்பு யாதோ? எனக்கு ஒன்றும் தெரியவில்லை காண். எ.று.

     கண் காது மூக்கு முதலிய கருவிகளைப் புறக்கரண மென்றும், மனம் சித்தம் முதலாய நான்கையும் அகக்கரண மென்றும் கூறுபவாகலின், “கரண மெலாம்” எனக் கூறுகின்றார். கரண வகை பொருந்திய தூல சூக்கும தேகங்கட்கு அப்பாலதாகிய புரியட்டகமாகிய காரண வுடம்பு காணப்படுவ தன்மையின், “கரணமெலாம் கரைந்த தனிக்கரை காண்பதுளதோ” என வினவுகின்றார். காரண வுடம்பின் உள்ளே ஆன்மா வுளதாகலின், அவ்வுடம்பை ஆன்ம நிலைக்குக் “கூரை” எனக் கருதி கூறுகின்றார். அவ்வுடம்பைக் காணுங்கால் அதனுள் இலங்கும் ஆன்மா காணப்படலாம் என்பதை யுன்னி, “கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ” எனக் கேட்கின்றார். உலகுடம்புகளாகிய மாயா கன்மப் படலங்களும் அதன் கண்ணதாகிய மூல மலப் படலமும் திருவருள் விளக்க வெளியை மறைத்துக் கொண்டிருத்தலால் அவற்றை அருள் வெளிக்கு அரணமாக வுருவகித்து “அரணமெலாம் கடந்த திருவருள் வெளி நேர்படுமோ” என மொழிகின்றார். நேர்படுதல் - காட்சிப் படுதல். அருள்வெளி இன்ப வுருவாகிய சிவத்தைக் கூடுமிடமாதல் பற்றி, “அவ் வெளிக்குள் ஆனந்த அனுபவம் தான் உறுமோ” என வுரைக்கின்றார். தூல சூக்கும காரண தேக மரணங்கள் என மரணம் பலவாதலின், “மரணமெலாம் தவிர்த்து” எனவும், இறுதியிற் கெடுவதாகிய புரியட்டகத்துக்குப் பின் ஆத்மா தனிமைக்கண் சிவஞான வின்ப வுருவாதலால் அதனை நினைந்து, “சிவமயமாகி நிறைதல் வாய்ந்திடுமோ” என இசைக்கின்றார். மூலமலம் ஆன்மாவுடன் அனாதி சம்பந்த முடையதாகலின், முத்தி நிலையிலும் அதன் இருப்பை யெண்ணி, “மூலமல வாதனையும் போமோ” என்று புகல்கின்றார். மலவாதனை - மலத்தால் விளையும் அறிவு மறைப்பு. சரணம் - திருவடிகள். மன்று - சிற்றம்பலம். சிவஞான மல்லது இவ்வையங்களைத் தீர்ப்பது வேறின்மை விளங்க, “பெருமான் தனது திருவுள்ளம் எதுவோ” என்றும், “சற்றும் அறிந்திலன்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால் திருவருள் வெளியனுபவம் தெரிவித்தவாறாம்.

     (2)