3378. நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
பரமர்திரு உளம்எதுவோ பரமம்அறிந் திலனே.
உரை: நாத தத்துவத்தின் உச்சியிலுள்ள மாயா மண்டலத்தின் உயர்ந்த நெறியைப் பையச் சென்று கடப்பேனோ; அதற்கு அப்பாலுள்ள ஞான வெளியின் நடுவிடத்தே தோன்றும் சிவத்தின் திருக்கூத்தைக் காண்பேனோ; சிவஞான முடிவிடமான திருவடியை என் தலை மேற் கொள்வேனோ; அதனால் எனக்குப் பழையதாய் வருகின்ற சிவபோகம் என்னுட் பொங்கி எங்கும் நிறையுமோ; வேதாந்த சித்தாந்தமென்ற இரண்டிற்கு மிடையே சமரச முண்டாகுமோ; வெறிதாகிய மாயை வெளி சுத்த சிவவெளியாய்த் திகழுமோ; திருவடி முற்றத் திருநீறு மணம் கமழ ஞான சபையில் ஆடல் புரிகின்ற பரமசிவத்தின் திருக்குறிப்பு யாதோ; முடி வொன்றும் தெரிகிலேன். எ.று.
சுத்த தத்துவத்தின் மேற் கண்ணது சிவ தத்துவ மெனப்படும் நாதம்; அதற்கு அந்தமாவது சுத்த மாயா மண்டல எல்லையிடம்; அதனை விரைந்து கடத்தல் அரிதென்பது பற்றி, “நாதாந்தத் திருவீதி நடந்து கடப்பேனோ” என வுரைக்கின்றார். நாத நாதாந்தங்கள் ஞான மயமாதலின், அதற்கு மேலாயது பரஞான வெளியாம்; அதனைச் சிதாகாசம் என்றலுமுண்டு. அதன் நடுவே பரசிவத்தின் பரானந்த நடனம் நிகழ்கிறதெனப் பெரியோர் கூறுதலால், ஞானவெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ” என்று சொல்லுகின்றார். சிவஞானப் பேற்றின் முடிவு சிவானத்தமாதலால், “போதாந்தத் திருவடி என் சென்னி பொருந்திடுமோ சிவபோகம் பொங்கி நிறைந்திடுமோ” என்று விழைகின்றார். போதாந்தம் - ஞானத்தின் எல்லை. சிவஞானிக்கு முடிவு சிவன் திருவடி யென்றலின், போதாந்தத்தைக் திருவடி யென்றும், அதனை எய்திப் பெறும் சிவஞானப் பேரின்பத்தைச் சிவபோகம் என்றும், சிவயோக சிவஞானப் பெருநெறியில் சிவபோகமாகிய செந்தேன் ஊறிய வண்ணமிருத்தலின், “புதுமையறப் பொங்கி நிறைந்திடுமோ” என்றும் புகல்கின்றார். “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என உமாபதி சிவனாரும், “ஓரும் வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த, சாரம் கொண்ட சைவ சித்தாந்தம்” எனக் குமரகுருபரரும் வேதாந்த சித்தாந்தங்களின் அடிப்படையொருமைத் தன்மையை யுணர்த்துவதால், “வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ” என எண்ணுகின்றார். வெறுவெளி, மாயா மண்டலத்தின் உள்வெளி; திருவருட் சத்தியாற் கலக்குற்றுப் பாகம்படும் இயல்பினதாதல் பற்றி, “வெறுவெளியில் சுத்த சிவவெளி மயந்தான் உறுமோ” என்பது, வெறு வெளியில் சுத்த மயமாம் சிவவெளி யுறுமோ என இயையும். சிவவெளி - சிதாகாசப் பெருவெளி. அதன்கண் மாயை வெறுவெளியடங்குமே யன்றி மாயை வெறு வெளிக்குச் சுத்த சிவவெளி வியாப்பியமாகா தென அறிக. அதனாற் றான் “உறுமோ” என வினவுகின்றார். பாதாந்த வரை - திருவடி முடிவு காறும். தலை முதல் திருவடி காறும் வெண்ணீறு கிடந்து சிவமணம் கமழ்வதை இங்கே குறிக்கின்றார். பரமம் - மேலாய் உறுவது.
இதனால் தத்துவம் கடந்து பெறும் சிவபோக நிலை தெரிவித்தவாறாம். (3)
|