3379.

     சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
          சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
     பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
          பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
     நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
          நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
     மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
          வள்ளல்குரு நாதர்திரு உள்ளம்அறி யேனே.

உரை:

     தில்லையம்பலத்தின் ஆனந்த சிந்தையில் எழுந்தருளும் சிவபெருமானுடைய திருக்கூத்தைப் பெரியோர் சொல்லச் சிறிது அறிந்த அளவின்றி மேலும் கண்டு முழுமையும் அறிந்தவனாவேனோ; உண்ணும் பதம் பெற்ற இனிய பழத்தைப் பிழிந்து பாலும் தூய பாகும் பசுமையான நெய்யும் கலந்த இன்பொருள் போலப் பெருமான் புகழைப் பாடி மகிழ்வேனோ; நாடோறும் பரவி இன்ப யோகத்தில் நீக்கமின்றிக் கலந்திருக்கும் நித்தர்களாகிய பெருமக்களுக்கு ஏற்ற தொண்டுகளைச் செய்து பெறலரும் மெய்யின்பத்தைப் பெறுவேனோ; சமய வுணர்வு தருகின்ற மலை போன்று செருக்கு மிக்குறும் சிறியவனாகிய யான் அருள் வள்ளலும் குருநாதனுமாகிய சிவபிரான் திருக்குறிப்பை அறியேன். எ.று.

     சமய வொழுக்கங்களைக் கண்டும் சமயக் கருத்துக்களைக் கேட்டும் ஒருவர்க் குளதாகும் பற்று முதிரந்து சமய வெறியாதலின், அதனை “மதம் பரவு மலைச் செருக்கு” எனக் குறிக்கின்றார். செருக்கின் மிகுதி விளங்க “மலைச் செருக்கு” என்று கூறுகின்றார். இச்சமயச் செருக்கு பரந்தியலும் பண்பினதாகிய அறிவைச் சுருக்கிச் சிறுமைப் படுத்தலால் “செருக்கிற் சிறந்த சிறியேன் நான்” எனத் தெரிவிக்கின்றார். சிதம்பரம் - தில்லைச் சிற்றம்பலம்; சிற்றம்பலம் சிதம்பரம் என மருவிற்று. இம் மரூஉ மொழியை இயல் மொழியாகக் கொண்டு சித் அம்பரம் எனப் பிரித்து அறிவாகாயம் எனப் பொருள் கூறுதல் உண்டு. ஆனந்தமே யுருவாகிய சிந்தையினராதலால் சிவபெருமானை, “ஆனந்த சித்தர்” என்றும், அம்பலத்தின்கண் சகளத் திருமேனி கொண்டு உலகவர்கண்டு மகிழும் திருக்கூத்தைத் தமது சிற்றறிவால் சிறிதே யறிந்தமை புலப்பட, “திருநடந்தான் சிறிதறிந்தபடி “என்றும், அகளமாய் ஆனந்தமாய் அறிவுவெளியாகிய அம்பலத்து நிகழும் அருட் கூத்தை முற்றும் கண்டறியேனாதலால், காணும் திறம் எய்துமோ என எண்ணுதலால், “இன்னும் முழுதும் அறிவேனோ” என்றும் இயம்புகின்றார். பழம் பழுத்து இனிதுண்ண அமையும் செவ்வி “பதம்” என வுரைக்கின்றார். பழம் எனப் பொதுப்படக் கூறினாராயினும் மாவும் பலாவும் வாழையும் எனக் கொள்க. இப் பழங்களின் சாறு கொண்டு என்பார், “பழம் பிழிந்து” என வுரைக்கின்றார். நறும் பாகு - இனிய சருக்கரைப் பாகு; பதமாக அமைந்த பாகின்கண் இனிய மணம் எழுதல் பற்றி, “நறும் பாகு” என்கின்றார். பசுவின் பாலின்கண் பெற்ற நெய் “பசு நெய்” எனப்படுகிறது. பழசாறும் பிறவும் கலந்த கலவை போலச் சொல்லும் பொருளும் அணியும் இசையும் கலந்த பாட்டை அமைத்துப் பாடி மகிழ வேண்டும்; அஃது சிறியேனாதலின் எனக்கு அமையுமோ என்பாராய், “பாடி மகிழ்வேனோ” என மொழிகின்றார். நாளும் சிவனைப் பராவும் போது உள்ளத்தே ஊறும் சிவானந்தச் செந்தேனைப் பருகி அதன் கண் ஒன்றிச் செயலறும் திருவருட் செல்வர்களை, “ஆனந்த நித்திரை நீங்காத நித்தர்” என்று கூறுகின்றார். அவரது யோகநிலை கண்டு உரிய பணிகளைச் செய்தவிடத்து மெய்யான இன்பநிலை கைவர மேவுதலை எண்ணி, “நித்தர் பணிபுரிந்து இன்ப சித்தி பெறுவேனோ” என இயம்புகின்றார்.

     இதனால் இன்ப சித்தி பெறும் திறம் தெரிவித்தவாறாம்.

     (4)