3380. களக்கம்அறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கம்அற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு உளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.
உரை: தில்லையம்பலத்தில் இறைவன் திருக்கூத்தைத் தெளிவுண்டாக நான் கண்டு வழிப்பட்ட போது, கடைப்பட்ட சிறுமையுடைய என்னுடைய மனத்தின்கண் அருட் காய் ஒன்று காய்த்தது; அது தானும் ஞான வொளி திகழப் பழுத்திடுமோ, பழுக்காமல் வெம்பி வீழ்ந்தொழியுமோ, அன்றி நன்கு சிவஞானக் கனியாய்ப் பழுக்குமாயின் அதுதானும் என் கைவசம் எய்துமோ, கவர்ந் தொழிக்கக் கருதுகின்ற மலமாயை என்னும் குரங்குகள் கவர்ந்து கொள்ளுமோ, அவற்றால் கவரப்படாதாயின் என் கைக்கண் ஐயமற எய்தப் பெற்று உண்பேனோ, உண்ணுமிடத்து வாய்த் தொண்டையில் இனிது விழுங்கப் படுமோ, தொண்டை விக்கித் தடைபடுமோ அருட் சோதி யுருவாகிய சிவ பெருமானுடைய திருவுளக் குறிப்புச் சிறிதும் அறியேன். எ.று.
“மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன், கனி தந்தால் கனியுண்ணவும் வல்லிரே, புனிதன் பொற்கழல் ஈசன் எனும் கனி, இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே” (தனிக்) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கு வடலூர் வள்ளலின் சிந்தனையை இப்பாட்டாற் பணி கொண்டுளது. இதன் கண் முதற் பொருளாவது “ஈசன் என்னும் கனி”. இக்கனி தில்லையம்பலத்தின்கட் கண்டு பணிபவர் மனக்கண்ணில் அருளுருவாய்த் தோன்றுகிறது. அதனை, “பொதுநடம் நான் கண்டு கொண்ட தருணம் கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு காய்தான்” எனப் புகல்கின்றார். ஞான சபையின்கண் காணப் பெற்றமை பற்றி, “களக்க மறக் கண்ட கொண்ட தருணம்” என வுரைக்கின்றார். களங்கம் என்பது களக்க மென வந்தது; காண்பார் காட்சிக்குக் களங்கம் செய்வன ஐயம் திரிபுகளாதலால் அவை களங்கமாயின; ஞானவொளி திகழும் சபையின் கண் களங்கத்துக்கு இடமின்மையின், “களக்கமற” என எடுத்துரைக்கின்றார். சிவஞானச் செய்திகள் இல்லாமை யுரைத்தற்குக் காண்கின்ற தம்மைக் “கடைச் சிறியேன்” எனக் கூறுகின்றார். திருவுள்ளத்தில் தோன்றிய உண்மை யன்பாகிய ஞானத்தை மலர் என்பாராய், “உளம் பூத்து” எனவும், அது திருவருளாய் உருக் கொண்டமை விளங்கக் “காய்த்த தொரு காய்தான்” எனவும் இயம்புகின்றார். “ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞான முண்டார்” (ஞான புரா) எனச் சேக்கிழார் கூறுதல் காண்க. காய் இனிய கனியாய்ப் பழுத்தாலன்றிச் சிறப்பு எய்தாதவாறு போலத் திருவருளுணர்வு சிவஞானத்தின் கனியாதல் வேண்டுதலின், “விளக்கமுறப் பழுத்திடுமோ” என்றும், உலகியற் பாச வுணர்வுகளால், அருளுணர்வு ஞானமாய் விளக்கமுறாது மாறுமோ எனப் பேதுற்று, “வெம்பி யுதிர்ந்திடுமோ” என்றும் எண்ணி யுழல்கின்றார். தூய சிவஞானத்துக்கு ஊறு செய்வன இல்லாமை நினைந்து, “வெம்பாது பழுக்கினும்” எனவும், அந்த ஞானமாகிய இனிய கனி தமக்கு எய்தா தொழியுமோ என்ற தடுமாற்றம் “மையல் மானுட வியல்பால்” உளதாதலால் “என் கரத்தில் அகப்படுமோ” எனவும் இயம்புகிறார். ஆன்ம சிற்சத்தி கரம் எனப்படுகிறது. மலமாயை கன்மங்கள் சூழ இருத்தல் பற்றிக் “கொளக் கருதும் மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோ” எனக் கவல்கின்றார். நன்கிருந்து இனிது உண்ணத் தலைப்பட்டுண்ணுங்கால் இடையில் விக்குள் தோன்றி உண்டலைத் தடுத்தல் பற்றி, “தொண்டை விக்கித் கொளுமோ” எனத் துவள்கின்றார். மலமாயைகளின் தடையில்வழி அவற்றின் பண்டை வாசனை தோன்றிச் சிவபோக நுகர்ச்சிக்குத் தடை செய்தலுண்மை நினைந்து இது கூறப்படுகிறது. “கனி தந்தால் கனி யுண்ணவும் வல்லிரே” என்பது, தரப்படுவது கனியாயினும் உண்ணத் தக்கதா என்ற ஐய விபரீத வுணர்வுகள் எழுந்து தடுத்தலுமுண்மையின், அக்கருத்து விளங்கவே, “மலமாயைக் குரங்கு கவர்ந்திடுமோ” எனவும், “தொண்டை விக்கிக் கொளுமோ” எனவும் இயம்புகின்றார். “எல்லார்க்கும் தான் ஈசன்” (சாழல்) என மணிவாசகர் முதலிய சான்றோர் விளம்புதலால், “ஈசன் எனும் கனி” எனப் பொதுத் தன்மை உணர்த்தினமை எண்ணிச் “சிறியேன் உளம் பூத்துக் காய்த்ததொரு காய்தான்” என்று கூறுகின்றார். உலகியற் காய்க்கு வரும் இடையூறு நினைவில் எழுந்து, திருவருளுணர்வுக்குப் பசுபாச வுணர்வுகள் மாறாய் வெதும்பி ஊறு செய்யுமோ என்று அச்சுறுத்தலின், “வெம்பி யுதிர்ந்திடுமோ” என்று இசைக்கின்றார்.
இதனால், சிவபோகத் திறமும் அதனைப் பெற்றுண்ணும் திறமும் உலகியல் வாய்ப்பாட்டில் வைத்து விளக்கியவாறாம். (5)
|