3382.

     ஆனத்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே
          அருமருந்தொன் றென்கருத்தில் அடைந்தமர்ந் ததுதான்
     கானந்த மதத்தாலே காரமறை படுமோ
          கடுங்கார மாகிஎன்றன் கருத்தில்உறைந் திடுமோ
     ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ
          உணக்கசந்து குமட்டிஎதிர் எடுத்திடநேர்ந் திடுமோ
     நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ
          நல்லதிரு உளம்எதுவோ வல்லதறிந் திலனே.

உரை:

     தில்லையம்பலத்தின்கண் ஆனந்தத் திருக்கூத்தை நான் கண்ட சமயத்தில் பெறற் கரிய மருந்தொன்று என் மனத்தின்கண் வந்து பொருந்திற்று; மணம் கமழும் மதநீர்க் கலப்பால் தனக்குரிய காரத்தை இழந்து போகுமோ; மிக்க காரமுடையதாகி என் கருத்தின் கண்ணையே உறைந்து போகுமோ; உடம்பு முற்றும் பரவ வுட்கொள்ளும் போது, எங்கும் இனிக்க இரசமாக இருக்குமோ; வாயுட் பெய்த வழிக் கசப்பு மிகுந்து குமட்டி வாந்தி யெடுக்க நேருமோ; வாய் குமட்டாத பக்குவ மறிந்து பிறர்க்குத் தர முடியுமோ; பெருமானே, நின்னுடைய நல்ல திருக்குறிப்பு யாதோ? செய்ய வல்லது இதுவென்று அறிகிலேன். எ.று.

     பொது, தில்லைத் திருச்சிற்றம்பலத்துக்குள்ள பெயர்களில் ஒன்று. அவ்வம்பலத்தின்கண் சிவபெருமான் நிகழ்த்தும் திருக்கூத்து, ஆனந்தத்தாண்டவமாகும்; அதனைக் கண்ட போது பிறவி நோயாற் பேதுறும் எனக்குப் பெறுதற்கரிய மருந்தொன்று என் மனத்தின்கண் தோன்றியுருவாகியது என்பாராய், “பொதுவில் ஆனந்த நடம் கண்ட தருணத்தே அருமருந்தொன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது” என எடுத்தோதுகின்றார். மருந்தெனவே, உலகியலில் உடம்புறு நோய்க் குண்ணும் மருந்துகளின் நினைவு எழுதலும், அம்மருந்துகளில் காடுகளிற் பெறலாகும் ஏழிலைப்பாலை முதலியவற்றால் காரம் இழந்து கெடும் மருந்து போலும் என்ற ஐய மகற்றுதற்குக் “கானந்த மதத்தாலே காரம் மறைபடுமோ” என்று கூறுகின்றார். காட்டில் யானையின் மதநீரின் மணம் கமழும் ஏழிலைப் பாலை என்ற பச்சிலை, “கானந்த மதம்” எனப்படும். பாலைச் சாற்றால் பூரம் முதலிய மருந்துப் பொருள்களின் காரம் கெடும் எனச் சித்த வைத்தியர் செப்புகின்றனர். சில மருந்துகள் காரம் மிக்குற்று உண்டார் நெஞ்சில் நெடிது நின்று எரிச்சலைப் பயத்தலால், “கடுங் காரமாகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ” என வினவுகின்றார். ஊன் - உடம்பு அந்தமற - முற்றும். வாயிலுண்டது உடல் முழுவதும் பரவி இனிப்புச் சுவை தருவது சில மருந்தின் இயல்பாதல் விளங்க, “ஊன் அந்தமறக் கொளும் போது இனிக்க ரசம் தருமோ” என்கின்றார். ஊன் அந்தமற என்பதற்கு உடம்பு நோயால் எய்தும் கேடு அறப் போவதற்கு என வுரைப்பினும் அமையும். ரசம் என்றது - இனிப்புச் சுவை. எதிர் எடுத்திடல் - உண்டதை வாந்தி பண்ணுதல்; காலுதலுமாம். “காலுமோதன மென்னக் கசந்ததால்” எனத் தலபுராண முடையார் கூறுவது காண்க. குமட்டாது உடற்குள் தங்கி நோய் நீக்கும் திறமறிந்து பிறர்க்குக் கொடுக்கும் திறம் எனக்கு உண்டாகுமோ என வேண்டுவாராய், “நான் அந்த உளவறிந்து பிறர்க்கு ஈய வருமோ” என உரைக்கின்றார். இனி, மருந் தென்றதைச் சிவஞானமாகக் கொண்டு மதம் மாற்சரிய முதலிய குற்ற நினைவுகளால் மறைந்தொழியுமோ, மிக்க வொளி யுடையதாய் என் நெஞ்சின் கண் உறைந்து நின்று உய்தி பெறுவிக்குமோ, உண்ணின்று சிவானந்தம் பெறுவிக்குமோ மனத்தின் பொல்லாங்கு ஏதுவாக உண்ணில்லாது நீங்கி விடுமோ, நான் அதன் இயல்பு கண்டு பிறர்க்கு நல்கித் திருவருள் நலம் பெறுவித்தலாகுமோ எனக் குறித்துரைப்பதாகக் கோடலும் ஒன்றாம்.

     இதனால், சிவஞானத்தை மருந்துருவில் வைத்து விளக்கியவாறாம்.

     (7)