3383.

     தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன்
          சந்நிதிபோய் வரவிடுத்த தனிக்கரணப் பூவை
     காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ
          கனிந்தபழங் கொண்டுவருங் காலதனை மதமாம்
     பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ
          பின்படுமோ முன்படுமோ பிணங்கிஒளித் திடுமோ
     வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை
          மறந்திடுமோ திருஉளத்தின் வண்ணம்அறிந் திலனே.

உரை:

     பரந்துள்ள தில்லையம்பலத்தின்கண் கூத்தாடி யருளும் எங்கள் குருநாதனான சிவபிரான் திருமுன்பு சென்று வருமாறு யான் விடுத்த மனமாகிய பூவைப் புள் காயைக் கொண்டு வருமோ, பழம் கொண்டு வருமோ, பழுத்துக் கனிந்த பழத்தைக்கொண்டு வரும் போது அதனை மதம் எனப்படும் பேய் குறுக்கிட்டுக் கவர்ந்துகொண்டு போய் விடுமோ, அக்கனி தானும் பெரும் பள்ளத்தில் வீழ்ந் தொழியுமோ, அப் பேய்க்கு முன்னே வருமோ, பின்வருமோ, போரிட்டு எங்கேனும் மறைந்து கொள்ளுமோ, வாயலகைப் படையாகக் கொண்டு தாக்கி வெற்றி பெறுமோ, தோல்வி யுறுமோ, போர்க் கலக்கத்தால் என்னை மறந்து விடுமோ; இறைவனே, நினது திருவுள்ளக் குறிப்பை அறிகிலேன். எ.று.

     திருப்பொது - தில்லையம்பலம். தா - தாய் என வந்தது. தாவியது தாயது என வருதல் காண்க. தாவுதல் - பரத்தல். அருள் மிகுதி பற்றி, “தாய்கொண்ட திருப்பொது” என்கின்றார். எனினும் பொருந்தும், பக்குவமெய்திய ஆன்மாக்களுக்கு ஞான மருளும் சிவத்தின் சிறப்பியல்பு நோக்கி, “குருநாதன்” என்று கூறுகின்றார். சன்னிதி - திருமுன்பு; சமுகம் என்பது முண்டு. கண் காது முதலியவற்றைக் கருவி யென்பது போல மன முதலியவற்றைக் கரணம் என்பது வழக்கு. மனத்தைப் பூவைப் பறவையாக உருவகம் செய்தலால், “கரணப் பூவை” என்கின்றார். பூவை - நாகணவாய் என நூலோர் வழங்கும் மைனாப் பறவை; இதுவும் கிளி போல் பழகற் கினியது என்பர். திருவருள் ஞானமாகிய கனி பெற்று வரல் வேண்டித் தில்லைப் பெருமான் திருமுன்பு செலுத்தியதாகக் குறிப்பு. போன விடத்து நின்றொழியாது எவ்வாற்றாலும் திரும்பி வரப் பணிக்கப் பெற்றமை விளங்க, “வர விடுத்து பூவை” என விதந்துரைக்கின்றார். மனத்தைத் தனிப்பட விடுத்தமையின் “தனிக் கரணப் பூவை” என்கிறார். துணை சேர்த்து விடுப்பின் காலக் கழிவுண்டாம் என்பது கருத்து. கிளி போலப் பேசுவ தன்றாகலின் உண்ணும் காய் கனிகளே அதனாற் கொணரப்படுவன எனக் கொண்டு, காயையோ கனியையோ யாதனைக் கொணரும் என நினைந்து, “காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ” என்று கூறுகிறார். சென்ற காரியம் கைக்கூடாதாயின் காய் என்பதும், கூடியதாயின் பழம் என்பதும் மரபாதலின் அக் கருத்தும் தோன்ற இக்கூற்று நிற்பதறிக. பூவைப் புள் காய் கனிகளையே கொணருவதாயினும், இடையில் உளவாகும் ஊறு நினைந்து என்னாகுமோ என எண்ணி அஞ்சுகின்றமை புலப்பட, “கனிந்த பழம் கொண்டு வருங்கால் அதனை மதமாம் பேய் கொண்டு போய் விடுமோ” என நினைக்கின்றார். மதம் எனும் குற்றத்தைப் பேய் என்னும் வழக்குப் பற்றி மதமாம் பேய் என்று குறிக்கின்றார். மதம் தோன்றிய வழி உடற் கண்ணும் உள்ளத்தின் கண்ணும் துடுப் பேற்படுவதால் கைகூடிய நலம் சிதறிக் கெடும் என்பது பற்றி, “மதமாம் பேய் கொண்டு போய் விடுமோ” என்று பேதுறுகின்றார். ஏற்படும் துடிப்பால் வாயலகின் துடிப்பால் ஏந்திய பழம் நிலத்திற் பள்ளத்தில் வீழ்ந்து மறைவது போல இறைவன்பாற் பெற்ற அருளாகிய கனி தவறி விடலாம் என்ற அச்சத்தால் “பிலத்திடை வீழ்ந்திடுமோ” என்று பேசுகின்றார். வரும் போது கனி கவர்வான் வந்து தாக்கும் பேய்ப் பகையையும் தனது மனமாகிய பூவையையும் என்னும் இரண்டிற்கு இடை நிகழும் பூசலை எண்ணிப் “பின்படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ” எனக் கருதுகின்றார். பிணங்குதல் - மாறிடுதல். ஒளித்தல் - மறைதல். போராடுமிடத்துப் பூவைக்குக் கை போல் உதவுவது அதன் வாயலகாதலால், “வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ”என்றும், இப் போர்க் கலக்கத்தில், வேண்டி விடுத்த ஆன்மாவாகிய தன்னை மறந்து போகலாம் என நினைந்து, “என்னை மறந்திடுமோ” என எண்ணி வருந்துகின்றார்.

     இதனால், மனம் விழைந்த அருட் கனி விழைந்தாங்கு எய்துமோ என எண்ணி வெய்துயிர்த்தவாறாம்.

     (8)