3384. தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச்
செல்கின்றேன் சிறியேன்முன் சென்றவழி அறியேன்
காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ
கால்இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ
விவேகம்எனும் துணையுறுமோ வேடர்பயம் உறுமோ
ஈட்டுதிரு அடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ
எப்படியோ திருவுளந்தான் ஏதும்அறிந் திலனே.
உரை: தீட்டப் பெற்ற மணிகள் இழைத்த அம்பலத்தின்கண் திருக் கூத்தாடும் திருவடிகளைக் கண்களாற் கண்டு பரவப் புறப்படுகின்ற சிறுமையுடையவனாகிய நான் முன்பு சென்ற வழியை மறந் தொழிந்தேன்; இனி யெனக்குக் காட்டுவழி கிடைக்குமோ, நாட்டு வழி புலப்படுமோ, அறியேன்; வழி கண்டு நடக்கலுற்றால் கால்கள் இளைப்புற்று மெலியுமோ, அவ்வாறு மெலிவுறாமல் மகிழ்ச்சி தோன்றி மேட்டு வழியிற் செலுத்துமோ, பள்ளத்திற் புகுத்துமோ தெரிந்திலது; விவேகம் என்னும் நல்லறிவு போந்து எனக்குத்துணை புரியுமோ, ஐம்புலன்களாகிய வேடரது அச்சம் உண்டாகுமோ, திருவருள் நலத்தைப் பெருக நல்கும் திருவடிக் காட்சி எனக்குக் கிடைக்குமோ, நினது திருவுளக் குறிப்பைச் சிறிதும் அறிகிலேன். எ.று.
மணி மன்று எனச் சான்றோர் கண்டு புகழ்த்தலால், தில்லையம்பலத்தைத் “தீட்டுமணிப் பொது” என்று சிறப்பிக்கின்றார். திருவருட் சிவஞானத் திருக்கூத்தை யாடுதலின், “நடஞ்செய் திருவடி கண்டு ஏத்தச் செல்கின்றேன்” என்றும், முன்பு இளமைக் காலத்தில் நிலவிய பாச பசு வறிவுகள் திருவருள் வேட்கை தோன்றிய நிலையில் தேய்ந் தொழிதலால் “முன்பு சென்ற வழியறிவேன்” என்றும் இயம்புகின்றார். கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழி, அவையன்றி நாட்டு மக்கள் பன்முறையும் சென்று பயின்ற நாட்டு வழி என இருவகைப்படுதலின், “காட்டு வழி கிடைத்திடுமோ, நாட்டு வழி கிடைத்திடுமோ” என்று வினவுகின்றார். காட்டு வழியை உலகியற் பொறி வழி எனவும், மற்றையதைச் சான்றோர் பயின்ற அருள் வழி யெனவும் கொள்க. செல்லும் செலவின்கண் தம்மைக் கொண்டேகும் கால்கள் தளர்தல் இயல்பாகலின், “கால் இளைப்புக் கண்டிடுமோ காணாதோ” என எண்ணுகின்றார். கால்கள் என்றது ஞான நன்னடையைக் குறிக்கிறது. தீநெறிக் குரிய உணர்வுகள் செயலும் புகுந்து மெலிவிப்பது தோன்ற, “இளைப்புக் காணுமோ” என அஞ்சுகிறது. ஆசாபாசக் சூழல்கள் பள்ள வழிகள் போல் துன்பம் செய்தலின், ஞான நெறியாகிய மேட்டு வழியில் என்னை நின் திருவருள் செலுத்துமோ என, வேண்டுவாராய், “மேட்டிடை விடுத்துமோ” என விளம்புகின்றார். விவேகம் - நல்லறிவு; உண்மை யுணர்வுவாகும். வேடர் - ஐம்புலன்கள் மேற்செல்லும் ஆசை. துன்பம் தந்து மன நிறையை அலைத்தல் பற்றி, “வேடர்” எனக் கூறுகின்றார். திருவடி, ஞானச் செல்வ நிலையமாதலால், “ஈட்டுத் திருவடி சமூகம்” என்று தெரிவிக்கின்றார். இந்த நலமெல்லாம் திருவருளாவல்லது பெறப்படுவ தன்மையால், “திருவுளந்தான் ஏதும் அறிந்திலனே” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், தில்லையம்பலத் திருவடிக் காட்சி பெறற்கு வேண்டும் ஞானநெறி அருள வேண்டியவாறாம். (9)
|