3385.

     ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே
          நடக்கின்றேன் அந்தோமுன் நடந்தவழி அறியேன்
     ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ
          உடைமைஎலாம் பறித்திடுமோ நடைமெலிந்து போமோ
     ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ
          இச்சைஎனும் இராக்கதப்பேய் எனைப்பிடித்துக் கொளுமோ
     ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ
          ஐயர்திரு உளம்எதுவோ யாதுமறிந் திலனே.

உரை:

     மணிகள் இழைத்த அம்பலத்தின்கண் ஞான நடம் புரிகின்ற திருவடிகளைக் கண்டு பராவுதற்கு நடந்து போகின்றேன்; ஆனால் நான் முன்பு நடந்து சென்ற நன்னெறியை மறந்து விட்டேன்; இப்போது நான் போகிற வழியில் ஆணவம் எனப்படும் பாவி என்னுடைய எதிரே வருமோ, எதிர்ப்பட்டு எனது நற்பண்புகளைக் கவர்ந்து கொள்ளுமோ, என்னுடைய நடையும் சோர்ந்து போகுமோ; கீழ்மைப் படித்தி வீழ்த்தும் அகங்காரம் எனப்படும் புலி குறுக்கே பாய்ந்து கெடுக்குமோ; இச்சையென்கிற இராக்கதப் பேய் போந்து என்னைப் பற்றிக் கொள்ளுமோ; இவ்வாறு உண்டாகிய மலத்தடைகளைப் போக்கிக் கொள்ளுதற்கு நின்னுடைய திருவருள் துணை புரியுமோ? தலைவராகிய உம்முடைய திருவுள்ளக் குறிப்பு இன்னதென அறியேன் எ.று.

     மணிப் பொதுவில் ஞான நடம்செய் திருவடிகள் என இயையும். உலகியல் இச்சைகள் நீங்கற் பொருட்டு ஆடுவது ஞான நாடகம் (சதகம்) என்பர் மணிவாசகர். இச்சை வகைகளை அறியாத இளமைக்கண் நின் திருவடிகளைக் கண்டேனாயினும், அன்று காணப் போந்த நன்னெறியை இப்போது உலகியற்றோய்வால் மறந்து போனேன் என்பாராய், “அந்தோ முன் நடந்த வழி யறியேன்” என மொழிகின்றார். இதற்கு முன்னோர் சென்ற வழி யறியேன் எனப் பொருள் கொள்வதுமுண்டு. ஆணவம், மூலமலம், ஆன்ம வறிவைச் சுருக்கி அணுத்தன்மை யுறுவிப்பது பற்றி மலம், ஆணவம் எனப்படுகிறது. அறிவை மறைப்பதால் ஆன்மா தனது அறிவொளி மழுங்கிக் குற்றம் பொருந்துவது பற்றி, “ஊன மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ” எனவும், ஆணவ மறைப்பால் ஆன்மாவின் இயற்கை யுடைமையாகிய சிற்சொரூபம் கெடுவது தோன்ற, “உடைமை யெலாம் பறித்திடுமோ” எனவும் வருந்துகின்றார். அறிவு, இச்சை, செயல் என்ற மூன்றும் அடங்க, “உடைமை யெலாம்” என வுரைக்கின்றார். நடை - நல்லொழுக்கம். அகங்காரம் - நான் என நிற்கும் பசு போதம்; இதனைத் தற்போதம் என்றும், நானென முந்துறும் தன் முனைப்பு என்றும் கூறுவர். இதனால் அறிவு செயல்கள் தாழ்வடைதலால், “ஈன முறும் அகங்காரம்” என இயம்புகின்றார். கீழ் வீழ்த்தும் செயல் பற்றி, புலி யுவமமாயிற்று. நிரம்பாத தன்மைத்தாதலால் இச்சையை, “இராக்கதப் பேய்” என்று பழிக்கின்றார். மலமாயையாகிய மலங்களால் திருவருட் பேற்றுக்கு உண்டாகும் தடைகள் திருவருள் ஞானமல்லது துணை வேறே இல்லாமையால், “மலத்தடை நீக்க அருட்டுணைதான் உறுமோ” எனவும், இறைவனது திருக்குறிப்பு ஆன்ம சிற்சத்திக்கு அப்பாற் பட்டதாகலின், “ஐயா திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால் மலத்தடைகளின் இயல்பு கூறியவாறாம்.

     (10)