3387. பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
முனிவதென் முனிவுதீர்ந் தருளே.
உரை: அம்பலத்திலே திருக்கூத் தியற்றும் அருளரசே, என் குணங்களை யுடைய இறைவனே, என்னைப் பெற்ற அருள் வள்ளலே, தாம் பெற்ற பிள்ளைகளின் குணங்களை யெல்லாம் பெற்றவராகிய தாய் தந்தையர் அறிவார்களே யன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் மேற் கொண்டுள்ள குணங்களாற் கொடியவனாயினேன்; என்னுடைய குணங்கள் அனைத்தையும் நீ முற்றவும் நன்கறிவாய்; அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பகன்று ஆண்டருள்க. எ.று.
அருளரசனாதல் பற்றிச் சிவனைக் “கொற்றவ” என்று கூறுகின்றார். நாளினும் பொழுதினும் நயந்து நோக்கி வளர்த்தலின், பெற்ற பிள்ளைகளின் குணஞ் செயல்களைப் பெற்றவர்கள் கண்டு கொண்டிருக்குமாறு பற்றிப் “பெற்ற தம் பிள்ளைக் குணங்களை யெல்லாம் பெற்றவர் அறிவர்” என்றும், அதனை வறுபுறுத்தற்கு “மற்றவர் அறியார்” என்றும் எடுத்துரைக்கின்றார். உலகின் கண் நிலவும் உயிர்களைத் தோற்றுவித்து வளர்த்தருளுதலால் இறைவனை, “என்றனை யீன்ற வள்ளலே” என வுரைக்கின்றார்; இதனைக் கூறுவது எனக்குத் தாயும் தந்தையுமாம் உரிமை யுனக்குண்டு என்பது விளங்கற்கு, “தாயானே தந்தையுமாகிய தன்னமகள் ஆயானே” (காறாயில்) எனப் பெரியோர் கூறுதல் காண்க. உலகியல் தாய் தந்தையர் போல நீயும் என் குணஞ் செயலனைத்தும் நன்கறிவாய் என்பாராய், “கொடியனேன் குணங்கள் முற்றும் நன்கறிவாய்” என்றும், பிள்ளைகளின் குணஞ் செயல்களை நேரிற் கண்டும் உலகத்துப் பெற்றோர் வெறுப்புறாதது போல நீ என்னை வெறுத்து நீக்குதல் ஆகாது என்பாராய், “என்றனை நீ முனிவது ஏன்? முனிவு தீர்ந்து அருள்” என்றும் முறையிடுகின்றார். முனிதல் - வெறுத்தல். தம்பால் உள்ள குணங்கள் கொடுமையானவை என்றற்குக் “கொடியனேன்” என்று கூறுகின்றார். தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல் முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்ப முடைமை என்ற எட்டும் சைவாகமம் கண்டு கூறுவன என்பர் பரிமேலழகர்.
இதனால், பெற்றோராகும் உரிமை காட்டித் தன்னை வெறுத்தலாகாதெனச் சிவன்பால் முறையிட்டவாறாம். (2)
|