3388.

     வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
          விரும்பினும் அங்ஙனம் புரியச்
     சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
          தந்தைதாய் மகன்விருப் பாலே
     இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
          என்றனை விழைவிக்க விழைந்தேன்
     செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
          திருவுளம் அறியுமே எந்தாய்.

உரை:

     வெவ்விய அறிவும் கொடுமைப் பண்புமுடைய மகன் கொடிய செயலொன்றைச் செய்யவிரும்புவானாயின், மகன்பால் உள்ள ஆசையால் அவனைப் பெற்ற தாயும் தந்தையும் அவன் புரியும் கொடுஞ் செயலுக்கு உடன்படுகின்றனர்; இந்த மதியுடைய சிறியவனாகிய யான் குற்ற மொன்றும், செய்ததில்லை; என் மனத்தில் உன்பால் அன்புண்டாகச் செய்தமையால் நான் உன்பால் அன்பு கொண்டேன்; செவ்விய அறிஞர் மதிக்கும் அருளமைந்த திருநெறியும் இதுவாகும்; இவை யனைத்தும் சிவ பெருமானாகிய எந்தையே, உனது திருவுள்ளம் அறிந்த செய்தி யன்றோ. எ.று.

     வெம்மதி - தீமையும் கொடுமையும் செய்விக்கும் அறிவு. கொடிய மகன்-கொடுமையே செய்யும் இயல்புடைய மகன். அவன் கொடியனவே செய்ய விரும்புவானாயின், அவனுடைய பெற்றோர் ஒருகாலும் விரும்ப மாட்டாராகலின், “மகன் கொடுஞ் செய்கை விரும்பினும்” என்றும், அவனோ தன் கொடுமைப் பண்பால் தாய் தந்தையரை மறுத்துக் கொடுமை புரியக் கருதுவனாயின், மகன்பாற் கொண்ட அன்பால் அவர்கள் அவன் செய்கைக்கு இசைவது உலகத் துண்மையின், “அங்ஙனம் புரியச் சம்மதிக்கின்றார். அவனைப் பெற்ற தாய் மகன் விருப்பாலே” என்றும் இயம்புகின்றார். மகன்பால் பெற்றோர்க்குளதாகும் அன்பு, அவன் பொருட்டுப் பெருங்குற்றத்தைச் செய்தற்கும் தூண்டித் துணை புரியும் என்பது கருத்து. எனக்குத் தாயும் தந்தையுமாகிய நின்பால் இத்தகைய செயலொன்றும் செய்ய வேண்டி முறையிடுகின்றேனில்லை என்பாராய், “இம்மதிச் சிறியேன் இழைத்த தொன்று இலை” என மொழிகின்றார். என் விருப்பு வெறுப்புகள் யாவும் நீ தோற்றுவிக்க என்னுள் தோன்றுவன என்றற்கு “நீ என்றனை விழைவிக்க விழைந்தேன்” என எடுத்துரைக்கின்றார். செம்மதி - செவ்விய அறிவுடைய சான்றோர் மேற்று; செம்பொருள் துணிந்த மதி யுடையவராதல் பற்றி, அவர்களைச் “செம்மதி” என்று சிறப்பிக்கின்றார். அந்தச் செம்மதி செல்வர் கண்ட திருவருள் நெறியையே யான் விழைந்து மேற்கொண்டு ஒழுகுகிறேன்; இது நின் திருவுளம் நன்கறிந்த உண்மையன்றோ என்பாராய், கருணைத் திருநெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய்” எனப் போற்றுகின்றார்.

     இதனால் செம்மதிக் கருணைத் திருநெறியை விளக்கி விண்ணப்பித்தவாறாம்.

     (3)