3389. பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே.
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
திருவுளம் அறியுமே எந்தாய்.
உரை: எந்தையாகிய சிவபெருமானே, பொய் கூறுதல் முதலிய குற்றங்கள் எண்ணிறந்தன செய்வேனாயினும், அவற்றுள் புல்லின் நுனியளவும் பிறர்க்கு வருத்தம் உண்டு பண்ணும் பிழை சிறிது உளதாயினும் வாயாற் சொல்ல மாட்டேன்; பிறர்பால் உண்டாகிய அருளுணர்வால் சிறு பிழைகள் பலவும் செய்ய நினைப்பதில்லேன்; நின்னுடைய திருவடிப் பேற்றின் கண் ஆர்வம் உடையனாவதன்றிச் செய்தற்குரிய பிழை வேறே ஒன்றும் அறியேன்; ஐயோ, எனது இந்நிலைமை தேவரீர் அறிந்ததன்றோ எ.று.
பொய் கூறல், புற முரைத்தல், இன்னா மொழிதல் முதலாய குற்றங்கள் பலவற்றை யுடையவனாயினும் புல்லின் நுனி யளவேனும் பிறர்க்கு வருத்தம் தருவதாயின் அதனை வாயாற் சொல்லுவதில்லேன் எனத் தமது சொல் தூய்மையை எடுத்துரைக்கின்றாராகலின், “பொய் பிழை யனந்தம் புகல்கின்றேன்” என்றும், “அதில் ஓர் புல் முனை யாயினும் பிறர்க்கு நைபிழை யுளதேல் நவின்றிடேன்” என்றும் இயம்புகின்றார். பொய் பிழை - பொய் கூறல் முதலிய குற்றங்கள். அனந்தம் - எண்ணில்லாதன. காரணமின்றியே வாய்ச் சொல்லில் விளைவனவாதலால், “அனந்தம் புகல்கின்றேன்” எனக் கூறுகின்றார். அந்தம் - அளவு. குற்றம் ஒவ்வொன்றையும் குறித்தற்கு “அதில்” என ஒருமையால் உரைக்கின்றார். சிறுமை யளவு காட்டற்குப் “புன் முனை” கூறப்படுகிறது. நைபிழை - நோய் விளைவிக்கும் குற்றம். என் சொற்களால் பிறர்க்குச் சிறு வருத்தம் தருவதாயினும் அதனைச் சொல்லா தொழிவது எனது இயல்பு என வற்புறுத்தற்கு “நைபிழை யுளதேல் நவின்றிடேன்” என உரைக்கின்றார். பிறர் துன்பம் காணின் என் மனத்தில் மிக்க அன்பு முதிர்ந்து அவர்பால் அருள் பெருகிப் பாய்தலால் செய்வன சிறு பிழையும் உறாதபடி செய்ய நினைக்கின்றேன் என்பாராய், “பிறர்பால் நண்ணிய கருணையால் பலவே கைபிழையாமை கருதுகின்றேன்” எனவும், மெய்யுற மேலும் பெற நினைப்பது இறைவன் திருவடி யின்பம் என்றற்கு “நின் கழற் பதம் விழைகின்றேன்” எனவும், வேறே குற்றமாவன யாதனைச் செய்கின்றேன் என என்னையே ஆராயுமிடத்து ஒன்றும் காணப்படவில்லை என்பாராய், “செய்பிழை வேறொன்றறிகிலேன்” எனவும் இயம்புகின்றார். எங்கும் யாவருள்ளத்தும் இருந்து நினைப்பவை யனைத்தையும் நேர்படக் காண்கின்ற பெருமானாதலால், “திருவுளம் அறியுமே எந்தாய்” என எடுத்தோதுகின்றார்.
இதனால் பொய் முதலாய பிழை சொல்லாமையும் நினையாமையும் எடுத்தோதியவாறாம்.. (4)
|